Thursday, February 28, 2019

No objection எவ்வளவு பெரிய inspiration



                                  எனக்கு மிக நெருக்கமான நண்பரின் நண்பர் அவர் . அரசு அலுவலகத்தில் ஒரு அலுவலராக பணியாற்றி வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். தன் திறமையாலும் விடாமுயற்சியாலும் tnpsc தேர்வில் வெற்றி பெற்று அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் . மிகவும் நேர்மையானவர்.

                                                                எளிய மக்களின் வேண்டுகோளையும், அவர்களின் தேவைகளையும் சிரமேற்கொண்டு தீர்த்து வைத்து வந்தார், இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு பின் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் உயர் பதவியை அடைய தேர்வு எழுத இருந்தார். அரசு பதவிகளில் இருந்து வரும் பணியாளர்கள் அவர்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் பெற்றபின் தான் அவர்களுக்கான பணி நியமன இட ஒதுக்கீடு நடக்கும் என்பது tnpsc வரையறை. நேர்மை என்பது அரிதான ஒரு விஷயமாகவே இங்கு பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில் , அவ்வாறு நேர்மையாய் இருப்பவர்களை எதிரிகளாய் பார்க்கும் பல நல்ல உள்ளங்களும் இச்சமூகத்தில் இருந்துதான் வருகிறார்கள். அதேபோல் ஒரு நல்லவர் தான் அவரது உயர் அதிகாரியாகவும் இருந்து வந்தார். எப்படியும் நண்பர் தேர்வில் வென்று விடுவார் என்பது அவருக்கு தெரிந்திருந்தது , அதனால் அவர் இவருக்கான நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் தராமல் இழுத்தடித்து பல்வேறு காரணங்கள் கூறி வந்தார். சீப்பை திருடிவிட்டால் திருமணம் நின்று விடும் என்பது அவருக்கு ஒரு நினைப்பு போலும். இவரும் இப்போது கிடைக்கும் அப்போது கிடைக்கும் என்று காத்திருந்து தேர்வை எழுதி தேர்ச்சியும் அடைந்துவிட்டார்.

       முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அனைத்தையும் கடந்து கடைசியாக நேர்முகத் தேர்விற்கும் சென்றுவிட்டார். நேர்முகத்தேர்வின் போது தான் என்ஓசி சர்டிபிகேட் கேட்கப்படும் . நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது, காவல்துறையில் உயர் பதவியில் இருந்து பின் டிஎன்பிஎஸ்சியின் தலைவராய்  இருந்தவர், மிகவும் பரிச்சயம் அடைந்தவர். அவர் அந்நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இருந்தார். என்ஓசி செர்டிபிகேட் பற்றி வினாவிய போது நண்பர் நடந்தவைகளை அவரிடம் கூறியுள்ளார். உடனே நேர்முக குழுவின் தலைவரான அவர் என்ஓசி சர்டிபிகேட்டை நீங்களே கையெழுத்து போட்டு அதை என்னிடம் சமர்ப்பியுங்கள் எனக் கூறி ,அவரின் நேர்முகத்தேர்வை முடித்து வைத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார். 

 சில மாதங்கள் கழித்து நண்பர் தான் பணியாற்றிய அந்த அலுவலகத்திலேயே அவருக்கு உயர் அதிகாரியான அந்த நல்ல உள்ளம் கொண்ட நபருக்கு  உயரதிகாரியாக சென்றார். அதற்கு முன் நண்பருக்கு உயரதிகாரியாக இருந்த அம்மனிதரையே தான்கேட்டிருந்த
என்ஓசி சர்டிபிகேட் படிவத்தை கொண்டுவரச் சொல்லி அதற்கு அவர் முன்னதாகவே நண்பர் கையெழுத்திட்டார் ,! அதாவது தனது என்ஓசி சர்டிபிகேட்டிற்கு தானே கையெழுத்திட்டார் . 
இதைக் கேள்விப்பட்ட உடன் வார்த்தையால் விவரிக்க இயலாத அளவிற்கு மகிழ்ச்சி எனக்கு. 
புல்லரிக்கும் நிகழ்வு அது .!! எவ்வளவு நம்பிக்கை அவருக்கு ? 

அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஒன்று அப்போது அமைந்தது. அப்போது அவர் பேசிய விதம் ஊக்கமளிப்பதாகவும் ,அவ்வளவு தன்னம்பிக்கையுடனும், சமூகத்தின் மீது அவர் கொண்ட அக்கறையையும் அந்த உரையாடல் எனக்கு உணர்த்தியது. இன்றைய இளைஞர்களில் பலரின் கனவாகவும், இலட்சியமாகவும், அவர்கள் சமூகத்தின் மேல் கொண்ட அக்கறையினாலும் அசாதாரணமான பல சூழ்நிலைகளை தாண்டி போட்டித் தேர்வுகளை எழுதி உயர் பதவிகளை அடைந்து சமூகத்துக்கான அவர்களது சேவையை தொடங்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது எவ்வளவு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கும். இவரது சந்திப்பிற்கு பின் எனது சொந்த வாழ்விலும் பல விஷயங்களை நான் முன்னெடுத்திருக்கிறேன். அதன்பின் ஒரு ஆறேழு மாதங்களுக்கு முன் நண்பரை சந்திக்க கூடிய மற்றொரு வாய்ப்பு எனக்கு எதோச்சையாக அமைந்தது , மூன்று,நான்கு வருடங்களுக்கு முன் அவரை நான் எப்படி பார்த்தேனோ ! அப்படியே இன்றும்.. எளிய மக்களின் மீதான அக்கரை சமூகத்தின் மீதான அவரது பிடிப்பு இன்றும் தளரவில்லை, அப்படியேதான் இருக்கிறது . 

நான் அவரிடம் கேட்டேன் ஒரு உயர் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள் இதற்கு மேலேயும் உயர்பொறுப்புக்கள் இருக்கிறது. அதை ஏன் முயற்சிக்க கூடாது ? எனக் கேட்டேன். அதற்கு அவர்,  இதற்கும் ஒரு காரணம் இருக்கு , அந்த உயர் பொறுப்புகளுக்கு போக வேண்டிய இடமும் , காலமும் இருக்கிறது. ஆனால் அதற்கான தேவை எனக்கு இப்போதைக்கு இல்லை. நான் இங்கே எதுவும் பெரிதாக செய்தது போல் எனக்கு தோன்றவில்லை., நான் முன்னால் இருந்த வேலையில் ஏதோ ஒன்று செய்தது போல் மனதிருப்தியும் இருந்தது, மேலும் என் பதவியை தாண்டிய ஒரு அதிகாரமும்,பொறுப்பும்  அப்போது எனக்கு தேவைப்பட்டது. அதன்பின் தான் இந்த உயர் பொறுப்புக்கு வர ஒரு எழுச்சி எனக்குள் வந்தது. ஆனால் இப்போது நான் இங்கு ஏதோவொன்றை செய்துக்கொண்டு  இருக்கிறேன் ,  இதன்பிறகும் செய்வேன் , ஆனால் இங்கு மக்களின் தேவையை பூர்த்தி செய்தது போல ஒரு மனநிறைவை இதுவரை நான் பெறவில்லை . எனவே அது ஏற்படும் வரையில் என்னுடைய சேவை இங்கு என் மக்களுக்கு தேவைப்படுகிறது எனக் கூறினர் . அதற்கு நான் வயது வயதுவரம்பு கடந்துவிட்டால் உயர் பொறுப்புகளுக்கான தேர்வுகளை நீங்கள் எழுதுவது சாத்தியம் இல்லை தானே ? என கேட்டேன். அதற்கு அவர் இப்போது நான் இருக்கும் பதவியிலேயே மக்களுக்கான தேவைகள் அதிகம் இருப்பதாய் உணர்கிறேன். எனவே இதை நான் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். இதைத்தாண்டி எனக்கு அதிகாரமும் பொறுப்பும் தேவையெனில் முயற்சிப்பேன். ஒருவேளை நீங்கள் கூறியது போல் வயது வரம்பைக் கடந்து விட்டால் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் நான் நீங்கள் கூறியபடி உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் நிச்சயம் என் வயது வரம்பை கடப்பதற்குள் நான் சென்று விடுவேன் . அப்படி இல்லை என்றால் நான் இருக்க வேண்டிய இடம் நிச்சயமாக இதுதான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் எனக் கூறினார். அவரது அந்த தெளிவான, அக்கறையான பேச்சு இன்றும் எனக்குள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. எவ்வளவோ உத்வேகம் அளிக்கக் கூடிய உண்மை கதைகளைத்  நாம் கேட்டிருக்கலாம் , கடந்திருக்கலாம், ஆனால்  நேரடியாக பார்த்து அனுபவித்து இந்த ஒற்றைச் சம்பவம் தினந்தோறும் என்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு நமது தேவை என்ன நாம் அதற்காக செய்யக்கூடிய சேவை என்ன என்பதை தெளிவோடும் நம்பிக்கையோடும் கடந்து கொண்டிருக்கும் என் நண்பர் இதைப் போன்ற உண்மைக்கதைகளின் ஹீரோக்களில் ஒருவரே...



                                                       இன்றும் கனவுகளோடும், லட்சியங்களோடும்  பயணித்துக்கொண்டிருக்கும் என் சக இளைஞர்கள் நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் எப்படி பயணிக்கிறீர்களோ !! அதேபோல் இச்சமூகத்திற்கு நீங்கள் தேவைப்படும் இடம் எது ?! என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு தெளிவோடும் ,உறுதியோடும்  செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.


Saturday, February 9, 2019

காற்றிலே வரைந்த ஓவியம்

அது ஒரு கோடை பொழுதின் உச்சி வெயில் நேரம். இரண்டரை நிமிட தொலைபேசி உரையாடலில் ஒட்டுமொத்த வெப்பமும் மார்கழி மாத வெண்பனி போல் எதிர்ப்பட்ட அனைத்தையும் மறைத்தது.


இதுவரை என்னாத அல்லது உணராத ஒரு புதுமையான புரிதலது. புதிதாக பள்ளி செல்லும் குழந்தை எப்படி வீட்டை , சுற்றத்தை மீறி அதனால் இன்னொரு வேறுபட்ட சூழ்நிலைக்குள் செல்ல முடியாமல் தவிக்குமோ ! அதுபோன்றதொரு தவிப்பு . இதுவரை இல்லாத அல்லது தெரியாத ஒரு உறவுக்குள் சிக்கும் மிக சாதாரணமான ஆனால் அசாத்தியப்பட்ட எண்ணமது , தற்போது அதை என்னும் போதும் சற்றே மயிர்க்கூச்செறியும் நினைவது. பார்க்கும் யாவற்றையும் புதிதாக அனுபவிக்க வைத்த நேரமது. 

வீசிய அந்த கடும் வெயிலும் வெப்பக்காற்றும் அவ்வளவு குளிரை அதுவரை தந்ததில்லை . 

பெரிதாய் பழக்கப்படாத நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்து திடீரென ஓர் உயிர் அதன் உணர்வு ரத்தமும் சதையுமாக எனை சூழ அந்த அற்புதமான தருணத்தை கடக்க இதுவரை இல்லாத அளவிற்கு காலம் தேவைப்பட்டது . ஒருபோதும் மரங்கள் கதைத்து நான் கண்டதில்லை , 
காற்று இசைத்தும் கேட்டதில்லை ... 
அதுவரை என் வார்த்தைகள் கோர்வையாய் வந்ததில்லை ,
அடித்து போட்டாற் போல் உறங்கி எழுந்தபின் , அந்த சோம்பலை முறிப்பது போல் அவ்வளவு இனிமையாக ஒரு உணர்வை நான் அனுபவித்ததில்லை, அவ்வுணர்வையும் அதை உண்டாக்கியவளையும் நோக்கி நெருங்கையில் !, வண்டின் முரல் கூட குறுக்கிடாத அந்நேரத்தில் ஒருபக்க கண்ணாடி உடைந்து, ஆற்று மணலை சுமந்து பின்னால் வருபவர்கள் கண்ணில் வாரித்தூவி சென்ற அந்த லாரி , பேருந்திற்கு அருகே சட்டென  அதன் இரும்புகரைத்த குரலில் அலரி ,
என் புதியதொரு அனுபவிக்க இயலாத அனுபவத்தை கலைத்து விட்டு சென்று விட்டது . ஆனால் அதன்பின்னும் அந்த ஜன்னலோரம் எனக்கு குறைவைத்துவிடவில்லை,
என் நெருங்கியவரும், எனை அதிகம் அலைகழித்தவருமான சுஜாதா எனதருகில்...,
ஜன்னலோரமா  ? அவரின் ஆள்காட்டி விரலோரமா  ? இருதலைகொள்ளி எறும்பாய்.,
சட்டென மனம் அந்த விரலோரமே ஐக்கியமானது. 
பேருந்துக்குள் அறுபதில் இருவராய் நானும் அவரும் ,

மனதுக்குள்"ஆயிரத்தில் இருவராய் " அவளும் நானும் , 
ஆற்றிலும் இல்லை , குளத்திலும் இல்லை , ஏன் கடல்லயே இல்லையாம் !
ஆனாலும் மூழ்கி கொண்டிருந்தேன் !

இருபத்தோராவது பக்கம் தாண்டுவதற்க்குள் இல்லாத ஆனால் வாழ்வோட வரவிருக்கும் அவளின் முகம் தெரியா உருவம் காற்றிலே மிதந்து அந்த புத்தகத்துக்கும் என் விழிகளுக்கும் இடையில் தன்னைத்தானே வரைந்துகொண்டிருந்தது , 

வரதட்சணை கூத்தெல்லாம் மனிதர்களுக்கானது, மனத்திற்க்கும், உணர்விற்க்குமானது அல்ல என்ற தெளிவுடன் தொடர்ந்தது பயணமும் , மீதமிருந்த 59 பக்க வாசிப்பும் ....