ஒரு சமூகம் முறையான முன்னேற்றம் கண்டுள்ளது , அதன் வளர்ச்சி மனித உணர்வுகளை மிக முதிர்ச்சியாக கையாள உதவியிருக்கிறது என்பதை ஒரு இன மக்கள் மற்றொரு இன மக்களுக்கு ஆதரவாக , அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் செய்த குற்றத்திற்காக களமாட வைத்ததிலிருந்து தெரியவரும். அதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை நியாயப்படுத்தவில்லை. ஆண்டாண்டு காலமாக நடந்தேறி வரும் நிறவெறிக்கு எதிராக அதனை தொடுத்த இனத்தை சேர்ந்த மக்களே அந்த தாழ்ந்த உணர்வுகளை தூக்கியெறிய முன்வந்து விட்டார்கள். புரட்சி என்பது இன்று தொடங்கி நாளை நடந்தேறுவதில்லை. அது ஒரு மரம் போன்றது விதைத்து, முளைத்து, தளிர்ந்து பூவாகி கனியாகுவது போல் காலம் தான் பதிலளிக்கும். அந்த பதிலை தான் தற்போது அமெரிக்க மக்கள் கூறி வருகின்றனர். மார்டின் லூதர் கிங்கிற்கு பிறகு இன துவேசத்தினால் இறந்த ஒருவரின் இறப்பு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் இருந்து இதனை அறிந்துக்கொள்ளலாம். கள்ளநோட்டு தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் ப்ளாய்ட் காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அது அவரின் குரல்வளை அல்ல. ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இனத்தினுடையது. இத்தனைக்கும் இறந்த ப்ளாய்ட், மார்டின் போல தலைவரும் இல்லை, புரட்சியும் செய்யவில்லை. சாமானியர் தான். பின் ஏன் இத்துனை போராட்டம் என்றால் ? மக்கள் தெளிவடைந்து விட்டனர். தாங்கள் செய்து வந்து உணர்வளிப்பு நிலையை தங்களுக்கு நேர்வதாக உருவகப்படுத்தி பார்க்கும் அளவிற்கு பக்குவமடைந்து இருக்கிறார்கள். ஒரு மனிதனை தாழ்நிலைக்கு தள்ளிய குற்றவுணர்ச்சிகளை கண்ணாடி போல சுக்கு சுக்காக உடைக்க துணிந்து விட்டனர். அதனால் தான் சாமானியனாக இருந்தாலும் அவன் இறப்பின் காரணத்தை மையப்படுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை மட்டும் தான் ஒரு போராட்டமோ, புரட்சியோ செய்ய வேண்டும். அப்போது தான் அது சரியானவற்றை எல்லாம் மட்டும் முன்னெடுத்து சென்றுள்ளது என்று உணரலாம். ப்ளாய்டின் மரணம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பதிலை காயிலிருந்து கனியாக மாற்ற வித்திட்டிருக்கிறது.
இது இந்தியாவில் சாத்தியமா ? என்றால் .. நிச்சயமாக சாத்தியமே. வர்க்க போராட்டம் உலகில் இரு வேறு விசயங்களை வைத்து வந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. முதலாளி- தொழிலாளி, நிறவெறி போன்று. ஆனால் இந்தியாவில் அவ்வாறில்லை, இங்கு வர்க்கங்களுக்குள் வர்க்கம், அதற்குள் ஒரு வர்க்கம் என தொடர் சங்கிலி போல் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மொழி , இனம் , மதம் , சாதி என பல்வேறு தீர்வு காணவேண்டிய பிரச்னைகள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்துவது இந்த தேசம் பல்வேறு தரப்பட்ட மக்களின் உணர்வுகளை ஒன்றினைக்கும் காரணி என்பதிற்காக மட்டுமே . இது அனைத்து தரப்பு மக்களையும் ஒற்றுமையாய் செயல்பட வைக்க தான் அன்றி அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை சகித்துக்கொண்டு செல்ல வேண்டும் எனபதற்காக அல்ல. இங்கு பெரிதாக முன்னெடுத்து வரப்பட்ட மத துவேசங்கள் பல்வேறு படிநிலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பதும் உண்மைதான். அதற்கடுத்த இலக்காக உள்ள சாதிய வர்க்கத்தை உடைக்க இங்கு முன்னெடுக்கப்பட்ட அத்துனை போராட்டங்களுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்து தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மற்ற சமுதாயத்தை சார்ந்தவர் வன்கொடுமையோ அல்லது குற்றச்செயலோ செய்திருந்தால் அதற்கெதிராக இங்கு ஒலிக்கும் குரல்களை சாதிய சார்புடையவர்கள் வசவு செய்யும் சத்தம் போதாதா இங்கு விதைத்த விதை மரமாகி விட்டது என்பதை உணர்த்த.... அமெரிக்காவில் நிறவெறி துவேசத்தை அனுபவித்த இனத்தில் இருந்து ஆளும் மனிதர்கள் வந்தனர். இனியும் வருவார்கள். அதேப்போல் இந்த தேசத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆளுகைக்கு வருவார்கள். துவேசத்தில் ஈடுபட்ட மக்கள் உணர்வு ரீதயான பக்குவமடைவார்கள். குற்றவுணர்களில் இருந்து வெளிவர ஆயுத்தமாகியிருக்கும் கூட்டம் அதை நிச்சயம் செய்யும்.
விரைவில் பூ வைக்கும் !
காய் காய்க்கும்
கனிவதை பார்ப்போம்...
No comments:
Post a Comment