உடுமலை ஆணவ படுகொலை வழக்கில் திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது , மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என குரல்கள் தொடர்ந்து ஒலித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பை உற்று நோக்க வேண்டிய கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. கடந்து பிப்ரவரி மாதம் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். அதிலும் முக்கிய குற்றவாளி வயதை காரணமாக காட்டி விடுதலை செய்யப்பட்டான். அதே போன்று தான் சங்கர் படுகொலை வழக்கிலும் நீதிமன்றம் செய்துள்ளது. குற்றத்திற்கு காரணமானவர்களை விடுவிப்பதும் துணை போனவர்களை தண்டிப்பதுமே தொடர்கதையாகி வருகிறது . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரும் இன்னும் விடுதலையாகாமல் இருப்பதை கூறலாம். இருந்தும் மரணத்தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
கடந்த 1982-ம் ஆண்டு நடந்த பச்சன் சிங் வழக்கில் மரணதண்டனையை உச்ச நீதிமன்றம் பெரும்பான்மையை கணக்கில் கொண்டு தீர்ப்பை உறுதி செய்தது. அதில் நீதிபதி பி.என்.பகவதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். மரண தண்டனை தன்னிச்சையாகவும் பாரபட்சத்துடனும் வழங்கப்படுவதாகவும் பதிவு செய்தார்.
மேலும் “மரண தண்டனை என்பது யதார்த்தத்தில் பாரபட்சமானதாகவும், சமூகத்தின் வறிய, பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு எதிராகவே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வசதி மற்றும் செல்வாக்கு படைத்தவர்கள் அதன் பிடியிலிருந்து எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதன் தன்னிச்சைத்தன்மை அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது" எனவும் தீர்ப்பளித்திருந்தார்.
இந்தியாவில் மரணத்தண்டனைக்கு எதிராக ஆணித்தரமாக எழுப்பப்பட்ட முதல் குரல் அதுதான். ஐநாவில் மரணத்தண்டனைகளை தடை செய்யும் தொடர் தீர்மானங்களுக்கு எதிராகவே இதுவரை இந்திய ஒன்றிய அரசு வாக்களித்துள்ளது. 90களுக்கு பிறகு இந்தியாவில் மரணத்தண்டனையாக வழங்கப்படும் தீர்ப்புகள் குறைவாக இருந்து வந்தாலும் அதை பற்றிய முறையான கொள்கை நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெரிவிப்பதே சிறந்தது.
மரணத்தண்டனயை நிறைவேற்றுவதனால் அரசு இச்சமூகத்தில் நிலைக்கொண்டுள்ள உளவியல் காரணங்களை ஆராயாமல் முடிவுரை எழுதி விடுகிறது.
தற்போதைய ஆணவ படுகொலை வழக்கில் மரணத்தண்டனையை ரத்து செய்ததை போல் பாரபட்சமின்றி அனைத்து வழக்குகளிலும் இது நிலைநாட்டப்படுமேயானால் தனிப்பட்ட முறையில் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் இதில் எதற்காக முக்கிய குற்றவாளியான பெண்ணின் தந்தை விடுதலை செய்யப்பட்டார் என்பது சற்றும் விளங்கவில்லை.(தீர்ப்பை வாசிக்கவில்லை) . முக்கிய குற்றவாளியாக உள்ள நபரை விடுதலை செய்தததை கண்டிப்பாக ஆட்சேபிக்கிறேன்.
மீண்டும் #நீதி நிலை நாட்டப்படும் என நம்புவோம்... மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர் பார்ப்போம் .
No comments:
Post a Comment