Friday, July 1, 2022

தரவரிசையால் தடைபடாத வளர்ச்சி

(BRAP)மாநில வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டத்தை, 301 சீர்திருத்தங்களுடன் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் (EODB) எளிதாக தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசுகள் உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இது உதவியது. மேலும் இனி வரும் காலங்களில் இதன் தரவரிசை நிலைகள் 2020 செப்டம்பர் முதல் புதிய திருத்தங்களுடன் 15 பிரிவுகளில் 301 காரணிகளின் செயல்பாடுகளை கொண்டு அளவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் BRAP உறுப்பினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கருத்துகள் அடிப்படையிலும் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பட்டியலானது 2020ம் ஆண்டிற்கானது. மேலும் இதில் 9 பிரிவுகளில் உள்ள 72 சீர்திருத்தங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   இதில் 97.89% பெற்று ஆந்திரா முதல் இடத்திலும் , 97.77% பெற்று குஜராத் இரண்டாவது இடத்திலும் , 96.97% பெற்று தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும்  உள்ளது. 

 2021 மற்றும் 2022ம் ஆண்டிற்கான EODBல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பன்மடங்கு முன்னேறி செல்லலாம், அதே சமயம் அடுத்த வருட BRAP தரவரிசையில் அவை அதல பாதாளத்திற்கும் கூட செல்லலாம். காரணம் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட  சட்டங்களை தமிழ்நாடு, கேரளா , மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றாது என ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்தாண்டு BRAPல் இவை உட்பட 15 பிரிவுகளில் உள்ள 301 சீர்திருத்தங்களையும் கருத்தில் கொண்டே தரவரிசை வெளியிடப்படும் போது, அவற்றில் பல்வேறானவற்றை தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களால் நடைமுறைப்படுத்த/ ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள நிலையில், இவைகள் BRAPல் அடிப்படை தகுதி நிலைகளாக தொடர உள்ளன.  எனவே அடிப்படை தகுதி நிலைகளை சரிவர பின்பற்ற இயலாத காரணத்தால் தரவரிசையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பின்னோக்கி செல்லலாம். ஆனால் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதி கவனம் செலுத்தி ஊக்குவிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை இந்த தரவரிசை தடுத்துவிடாது.

No comments:

Post a Comment