Sunday, August 7, 2022

மழைநீர் வீணாக கடலில் கலப்பதென்பது வெறும் விதண்டாவாதம்.

மழைநீர் வீணாக கடலில் கலந்தது என்ற சொற்றொடரே அபத்தமானது.

2017ம் ஆண்டிற்கான உலகவங்கி அறிக்கையின் படி இந்தியாவில் 1083 செ.மீ மழையும், உலகம் முழுவதும் 20824.7 செ.மீ மழையும் பதிவானது.

 
ஆண்டுதோறும் பொழியும் சராசரி மழைப்பொழிவில் குறைந்தபட்சம் 14% முதல் அதிகபட்சம் 27% வரையிலான அளவிற்கு மட்டுமே மழை நீர் அணைகள், ஏரிகள், ஆறுகள்,  குளங்கள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் குறைந்தபட்ச தகுதி நிலையினை கொண்ட அடையாளம் காணப்பட்டுள்ள 57,985 அணைகள் , 11 கோடியே 70 லட்சம் ஏரிகள் , 30 கோடியே 40 லட்சம் குளங்கள் , ஆயிரம் மைல் தூரங்களை தாண்டி பாயும் 76 நதிகள் மற்றும் அது தவிர்த்த ஏனைய கிளை நதிகள் உள்ளிட்டவை தான் இந்த அதிகபட்ச அளவான 27% வரையிலான நீரை சேமிக்கப் பயன்படுகின்றன. இது தவிர மீதமனைத்தும் கடலில் தான் கலக்கின்றன. மங்காத வளங்களை தன்னிடம் கொண்டிருக்கும் கடலின் மூலமே ! மழைநீர் கடலில் கலத்தலில் தான் அடங்கியுள்ளது. அவ்வாறிருக்கும் வளத்தின் மூலத்தினை எப்படி வீணாக கலக்கிறது என்று கூற முடியும்.  மழைபொழிவின் மொத்த அளவில் மிக சொற்ப அளவிலான நீர் மட்டுமே பல்வேறு நிலைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. மீதமனைத்தும் சிலரின் கூற்றுப்படி வீணாக கடலில் கலக்கிறது. சிலர் சொல்வது போல் கற்பனைக்காக ஒரு சில அணைகளை கட்டுவதாகவே வைத்துக்கொள்வோம் , அப்போதும் கடலில் கலக்கும் மழைநீரின் அளவை 1 சதவீதம் அளவிற்கு கூட உங்களால் குறைத்து விட முடியாது என்பதே நிதர்சனம். இயற்கை அதன் சங்கிலித்தொடரை எங்கேயும் மாற்றிக்கொள்ளவில்லை. உயிரினங்களின், குறிப்பாக மனிதர்களின் அதீத தேவைகளுக்காக அந்த சங்கிலிதொடர் பல்வேறு செயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் தன்னை சற்று வளைத்தும் , நெழித்தும் தான் செல்கிறது. வேறு வழியில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எப்படி நியாயப்படுத்தினாலும், நாகரீக வளர்ச்சியடைந்த மனிதர்கள் இயற்கையின் சங்கிலித்தொடரில் தங்களை மிக வன்மையாக இடைச் சொருகிக்கொள்கிறார்கள். 


கடலில் மழைநீர் கலக்கவில்லை எனில் அதன் இயற்கையான சங்கிலித்தொடர் முற்றிலும் அறுபடும். அதிகபட்ச வளங்களை கொண்டுள்ள கடலில் வேதி மாற்றங்கள் நிகழும்.  கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பாதிப்பால் காலநிலை மாற்றங்கள் ஏற்படும். சிலரின் கூற்றான வீணாகும் மழைநீர் அதன்பின் மண் வந்து சேராத நிலைக்கும் வாய்ப்புண்டு.  இது புவியின் கழுத்தை இறுக நெரித்துக்கொண்டு மூச்சு விட சொல்வதற்கு சமமானது.


 அணைகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச புவி அமைப்பை/சூழலை பெற்றிராத தமிழ்நாடு போன்ற மா'நிலங்களில், மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என எவர் கூறினாலும் அது அபத்தம், அதில் நிதர்சனம் இல்லை, வெறும் விதண்டாவாதம் தான்.  காமராஜர் இல்லை , கரிகால சோழனே வந்தாலும் இதான் எதார்த்தம்...

Tuesday, August 2, 2022

5ஜி ஆபத்பாந்தவனாக இருந்திருக்கும் !


2007ல் நடந்த 2ஜி அலைகற்றை ஏலத்தில் இந்திய ஒன்றியத்தில் மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு மண்டலங்களில் 18 மண்டலங்களுக்கு மட்டும் ஏலம் விடப்பட்டது. 4 மண்டலங்களில் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. 22 மண்டலங்களிலும் சேர்த்து ஏலத்தொகையாக எதிர்பார்த்தது 40 ஆயிரம் கோடி ரூபாய். ஆனா‌ல் 18 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் எடுத்த ஏலத்தொகை மதிப்பு 9407 கோடி ரூபாய் தான். அரசு எதிர்பார்க்கப்பட்ட தொகையை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 30593 கோடி ரூபாய் குறைவான ஏலத்தொகையே கிடைத்தது.. அதற்கான காரணங்களும் பல இருந்தன. ஆனால் தலைமை தணிக்கைத்துறை எதிர்பார்க்கப்பட்ட தொகையையும் சேர்த்து அரசுக்கு உத்தேச வருமான இழப்பாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என அறிக்கை கொடுத்திருந்தது. அதனால் நடந்த வழக்கும் அதன் விவரங்களும் நாடறிந்தது. 


இதேபோன்று 3ஜி அலைகற்றையிலும் எதிர்பார்க்கப்பட்ட ஏலத்தொகையாக 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் ஏலம் போன தொகை 67 ஆயிரத்து 719 கோடியாகும்.

4ஜி ஏலத்தில் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட தொகயானது 40ஆயிரம் கோடி ரூபாய் . ஆனால் ஏலம் போன தொகை 77 ஆயிரத்து 814 கோடி ரூபாய்.

தற்போது நடைபெற்ற 5ஜி அலைகற்றை ஏலத்தில் அரசு எதிர்பார்த்த உத்தேச தொகை 4.3 லட்சம் கோடிகள். ஆனால் ஏலம் எடுக்கப்பட்ட தொகை 1லட்சத்து 50ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே. எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 2லட்சத்து 79 ஆயிரத்து 827 கோடி ரூபாய் குறைவு. 

2ஜி அலைக்கற்றை ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட ஏலத்தொகையில் 30 ஆயிரத்து 593 கோடி ரூபாய் குறைவாக ஏலம் போனதற்கு , அதைவிட கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பீட்டு கணக்கை அந்த காலகட்டத்திலேயே சமர்பித்த தலைமை தணிக்கை துறை, 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 4 மடங்கு வருவாய் இழப்பீடு என இந்தியாவே கேட்டிடாத ஒரு தொகையை கணக்காக தற்போது சமர்பித்தால் என்னவாகும் ? என்பதை யோசித்தாலே தலை சுற்றுகிறது !!

2ஜி ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட தொகை அந்த காலகட்டத்தில் மிக அதிகமானது. ஆனால் பெருந்தொகை எதிர்பார்க்கப்பட்டதன் காரணம், அப்போது தனியார் நிறுவனங்களின் போட்டிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் அதீத வளர்ச்சி. அதன்பிறகான 3ஜி மற்றும் 4ஜி அலைகற்றையிலும் இந்த நிலை தொடரத்தான் செய்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் அதைப்பற்றி பெரிதாய் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் 3ஜி மற்றும் 4ஜி க்கு எதிர்பார்க்கப்பட்ட தொகையே மிக மிக குறைவானது. குறைவான எதிர்பார்ப்பு தொகையை கூறி அதிகமான ஏலத்தொகையை பெற்றதால் அதுகுறித்தான சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கும் வாய்ப்பில்லாமல் போனது. 2ஜி முதல் 5ஜி வரையிலான தொலைத்தொடர்பு வளர்ச்சி இந்தியாவில் உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு அபரிவிதமானது. ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பில் போட்டிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் போட்டிக்கான சூழலும், களமும் மிக அதிகமாகவே இருக்கிறது. அதனை அரசு பயன்படுத்தி கொள்ளாததே தற்போது தொலைத்தொடர்பு துறை மூலமாக பெரும் பொருளாதார வருவாய் இழப்பின் காரணம். 

இத்தனை தனியார் நிறுவனங்களின் ஏல பங்களிப்பில் பெற்ற குறும் ஏலத்தொகைக்கு பதிலாக, BSNLக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் மூலம் 5ஜி அலைகற்றை ஏலத்தை முழுமையாக BSNLயிடம் கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருக்கும் பட்சத்தில் தற்போதைய 5ஜி ஏலத்தொகையை விட 13 ஆயிரத்து 287 கோடி ரூபாய் அதிகமாக பெற்றிருக்கலாம். மேலும் BSNLஐ வளர்ச்சி பாதைக்கும், தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு ஜியோவை விட மிக குறைந்த விலையிலும் வழங்கியிருக்கலாம். மேலும் BSNL இவ்வளவு பெரிய தொகையுடன் போட்டியிட்டிருந்தால் ஏலத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் இன்னும் அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருப்பார்கள். அதன்காரணமாக ஏலத்தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட பலமடங்கு அதிகமாக உயர்ந்திருக்கும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அரசுக்கு ஆபத்பாந்தவானாக 5ஜி இருந்திருக்கும் ....