Sunday, August 7, 2022

மழைநீர் வீணாக கடலில் கலப்பதென்பது வெறும் விதண்டாவாதம்.

மழைநீர் வீணாக கடலில் கலந்தது என்ற சொற்றொடரே அபத்தமானது.

2017ம் ஆண்டிற்கான உலகவங்கி அறிக்கையின் படி இந்தியாவில் 1083 செ.மீ மழையும், உலகம் முழுவதும் 20824.7 செ.மீ மழையும் பதிவானது.

 
ஆண்டுதோறும் பொழியும் சராசரி மழைப்பொழிவில் குறைந்தபட்சம் 14% முதல் அதிகபட்சம் 27% வரையிலான அளவிற்கு மட்டுமே மழை நீர் அணைகள், ஏரிகள், ஆறுகள்,  குளங்கள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் குறைந்தபட்ச தகுதி நிலையினை கொண்ட அடையாளம் காணப்பட்டுள்ள 57,985 அணைகள் , 11 கோடியே 70 லட்சம் ஏரிகள் , 30 கோடியே 40 லட்சம் குளங்கள் , ஆயிரம் மைல் தூரங்களை தாண்டி பாயும் 76 நதிகள் மற்றும் அது தவிர்த்த ஏனைய கிளை நதிகள் உள்ளிட்டவை தான் இந்த அதிகபட்ச அளவான 27% வரையிலான நீரை சேமிக்கப் பயன்படுகின்றன. இது தவிர மீதமனைத்தும் கடலில் தான் கலக்கின்றன. மங்காத வளங்களை தன்னிடம் கொண்டிருக்கும் கடலின் மூலமே ! மழைநீர் கடலில் கலத்தலில் தான் அடங்கியுள்ளது. அவ்வாறிருக்கும் வளத்தின் மூலத்தினை எப்படி வீணாக கலக்கிறது என்று கூற முடியும்.  மழைபொழிவின் மொத்த அளவில் மிக சொற்ப அளவிலான நீர் மட்டுமே பல்வேறு நிலைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. மீதமனைத்தும் சிலரின் கூற்றுப்படி வீணாக கடலில் கலக்கிறது. சிலர் சொல்வது போல் கற்பனைக்காக ஒரு சில அணைகளை கட்டுவதாகவே வைத்துக்கொள்வோம் , அப்போதும் கடலில் கலக்கும் மழைநீரின் அளவை 1 சதவீதம் அளவிற்கு கூட உங்களால் குறைத்து விட முடியாது என்பதே நிதர்சனம். இயற்கை அதன் சங்கிலித்தொடரை எங்கேயும் மாற்றிக்கொள்ளவில்லை. உயிரினங்களின், குறிப்பாக மனிதர்களின் அதீத தேவைகளுக்காக அந்த சங்கிலிதொடர் பல்வேறு செயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் தன்னை சற்று வளைத்தும் , நெழித்தும் தான் செல்கிறது. வேறு வழியில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எப்படி நியாயப்படுத்தினாலும், நாகரீக வளர்ச்சியடைந்த மனிதர்கள் இயற்கையின் சங்கிலித்தொடரில் தங்களை மிக வன்மையாக இடைச் சொருகிக்கொள்கிறார்கள். 


கடலில் மழைநீர் கலக்கவில்லை எனில் அதன் இயற்கையான சங்கிலித்தொடர் முற்றிலும் அறுபடும். அதிகபட்ச வளங்களை கொண்டுள்ள கடலில் வேதி மாற்றங்கள் நிகழும்.  கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பாதிப்பால் காலநிலை மாற்றங்கள் ஏற்படும். சிலரின் கூற்றான வீணாகும் மழைநீர் அதன்பின் மண் வந்து சேராத நிலைக்கும் வாய்ப்புண்டு.  இது புவியின் கழுத்தை இறுக நெரித்துக்கொண்டு மூச்சு விட சொல்வதற்கு சமமானது.


 அணைகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச புவி அமைப்பை/சூழலை பெற்றிராத தமிழ்நாடு போன்ற மா'நிலங்களில், மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என எவர் கூறினாலும் அது அபத்தம், அதில் நிதர்சனம் இல்லை, வெறும் விதண்டாவாதம் தான்.  காமராஜர் இல்லை , கரிகால சோழனே வந்தாலும் இதான் எதார்த்தம்...

No comments:

Post a Comment