நாகா மற்றும் குகி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மெய்தேயில் உள்ளவர்கள் SC, OBC, உயர்சாதியினருக்கான EWS மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்த சாதி இந்துக்களாக உள்ளனர். மணிப்பூரில் SC-2%, OBC-17%, ST-31%, உயர்சாதியினருக்கான EWS -10% இடஒதுக்கீடு முறை தற்போது அமலில் உள்ளது.
இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு முன் மெய்தெய் மக்கள் தாங்களும் பழங்குடியின வம்சாவழியை சேர்ந்தவர்கள் தான் என்றும், எனவே எங்களையும் பட்டியல் பழங்குடியின பிரிவில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் மெய்தெய் மக்களின் சில பிரிவினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைக்க பரிசீலிக்க வேண்டுமென அம்மாநில உயர்நீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர் வினையாக நடந்த போராட்டம் தான் வன்முறையாக மாறியது. மெய்தெய் மக்களை பழங்குடியின பட்டியலில் இணைத்தால் தங்களுக்கு உரிய இடஒதுக்கீட்டு உரிமைகளும், நிலஉரிமைகளும் பறிபோகும் என்ற அச்சத்தில் பழங்குடியினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தை எதிர்த்து மெய்தெயினரும் போராட வன்முறை மூண்டது.
((மெய்தெய் இனக்குழுவை பட்டியல் பழங்குடியில் இணைப்பதற்கும் அவர்களுக்குள்ளேயே இரு வேறுபட்ட கருத்துகள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.))
மெய்தெய் மக்கள் சமவெளி பகுதிகளில் இருந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும், அவர்கள் பழங்குடியினர் கலாச்சாரத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதாலும் அவர்களை பழங்குடியினர் என வகைப்படுத்த முடியாது. மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்தெய் இனக்குழுவை சேர்ந்தவர்கள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். மேலும் பொருளாதாரம், அரசியல் அதிகாரம் என அனைத்திலும் மெய்தெய் மக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
ஆனால் அவர்களின் நிலப்பகுதி வெறும் 10 சதவீதம் தான் என்பதால் அதனை விரிவுபடுத்த நினைக்கின்றனர்.
மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களை மெய்தெய் மக்கள் உரிமை கொண்டாட முடியாது. எனவே பழங்குடியின பிரிவில் அவர்களை இணைத்து, குகி மக்களை வெளியேற்றும் படலத்தை தொடங்குவதன் மூலம் முக்கிய பகுதியான இம்பால் உள்ளிட்ட மலைப்பகுதி நிலங்களை தங்கள் வசம் ஆக்கிக்கொள்ளலாம் என்பது அங்குள்ள மதவாத கும்பலின் நோக்கம்.
இதனால் தான் 1950களுக்கு பிறகே குகி இன மக்கள் இந்திய ஒன்றியத்திற்குள் குடியேறினார்கள் என்றும், எனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தி அவர்களை இந்திய ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் மெய்தெய் மக்கள் வழியாக மதவாத கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது.
1970களில் அங்கு நடந்த ஆட்சி மாற்றம் இனக்குழுக்களை, மதக்குழுக்களாக மாற்றத் தொடங்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது மணிப்பூரில் அரங்கேறுவதும் இன வன்முறை இல்லை. அது இன போர்வைக்குள் நடந்தேறும் மத வன்முறை. இந்திய ஒன்றியத்தில் இணைந்த போது மெய்தெய் இனக்குழுவில் 100க்கும் மேற்பட்ட உட்குழுக்கள் இருந்துள்ளன. எல்லை பிரச்னை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் தங்களை அரசிடம் இருந்தும், ராணுவத்திடம் இருந்தும் தற்காத்து கொள்ள தங்களுக்கு மத அடையாளமிட்டு கொண்டனர். மதவாத சக்திகளும் தங்கள் சித்தாந்த பரப்புக்காக, அரசிடமும், அரசு இயந்திரத்திலும் உள்ள தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தந்திர வலையிட்டனர்.
இனக்குழுக்கள், மத அடையாளங்களை தங்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த நினைத்தன. ஆனால் மதங்கள் இனக்குழுக்களை பாரபட்சமின்றி முதலில் மறைத்தும், பின் அழித்தும் தங்கள் பசிக்கு இறையாக்கி கொள்வன என்பதை அவர்களால் உணர முடியவில்லை. இனக்குழு என்ற சொல்லாடலை மதங்கள் இன்றும் உடன் வைத்துக்கொள்வதற்கான காரணம், அது மத துவேசங்களுக்கு தேவையான மற்றுமொரு கருவி. அவ்வளவே.
மெய்தெய் இனக்குழுவை பட்டியல் பழங்குடியில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டில் மறுவரையறையை மேற்கொள்வதற்கான குழு அமைக்கவும், இரு பிரிவினைரையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதின் மூலமாகவும் பிரச்னையையும், வன்முறையையும் தற்காலிக முடிவுக்காவது கொண்டு வரலாம், ஆனால்
அரசு அடுத்த வருடம் மே மாதம் வரை இது தொடர்பாக வாய் திறக்கப்போவதுமில்லை, பிரச்னையை தீர்க்கப்போவதுமில்லை.
தற்போது வரை, வன்முறையால் நூற்றுக்கணக்கான உயிர்களும், வன்முறையை கலைக்க நடந்த துப்பாக்கி சூடு உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு 11க்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர்.