Monday, June 22, 2020

சமூக உளவியலை உன்னிக்கிறதா அரசு ?

உடுமலை ஆணவ படுகொலை வழக்கில் திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது , மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என குரல்கள் தொடர்ந்து ஒலித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பை உற்று நோக்க வேண்டிய கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. கடந்து பிப்ரவரி மாதம் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.  அதிலும் முக்கிய குற்றவாளி வயதை காரணமாக காட்டி விடுதலை செய்யப்பட்டான்.  அதே போன்று தான் சங்கர் படுகொலை வழக்கிலும் நீதிமன்றம் செய்துள்ளது. குற்றத்திற்கு காரணமானவர்களை விடுவிப்பதும் துணை போனவர்களை தண்டிப்பதுமே தொடர்கதையாகி வருகிறது . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரும் இன்னும் விடுதலையாகாமல் இருப்பதை கூறலாம். இருந்தும் மரணத்தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. 

கடந்த  1982-ம் ஆண்டு நடந்த பச்சன் சிங் வழக்கில் மரணதண்டனையை உச்ச நீதிமன்றம் பெரும்பான்மையை கணக்கில் கொண்டு தீர்ப்பை உறுதி செய்தது. அதில் நீதிபதி பி.என்.பகவதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். மரண தண்டனை தன்னிச்சையாகவும் பாரபட்சத்துடனும் வழங்கப்படுவதாகவும் பதிவு செய்தார்.
 மேலும் “மரண தண்டனை என்பது யதார்த்தத்தில் பாரபட்சமானதாகவும், சமூகத்தின் வறிய, பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு எதிராகவே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வசதி மற்றும் செல்வாக்கு படைத்தவர்கள் அதன் பிடியிலிருந்து எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதன் தன்னிச்சைத்தன்மை அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது" எனவும்  தீர்ப்பளித்திருந்தார். 




இந்தியாவில்  மரணத்தண்டனைக்கு எதிராக ஆணித்தரமாக எழுப்பப்பட்ட முதல் குரல் அதுதான். ஐநாவில் மரணத்தண்டனைகளை தடை செய்யும் தொடர் தீர்மானங்களுக்கு எதிராகவே இதுவரை  இந்திய ஒன்றிய அரசு வாக்களித்துள்ளது.  90களுக்கு பிறகு இந்தியாவில் மரணத்தண்டனையாக வழங்கப்படும் தீர்ப்புகள் குறைவாக இருந்து வந்தாலும் அதை பற்றிய முறையான கொள்கை நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெரிவிப்பதே சிறந்தது.
மரணத்தண்டனயை நிறைவேற்றுவதனால் அரசு இச்சமூகத்தில் நிலைக்கொண்டுள்ள  உளவியல் காரணங்களை ஆராயாமல் முடிவுரை எழுதி விடுகிறது. 

தற்போதைய ஆணவ படுகொலை வழக்கில் மரணத்தண்டனையை ரத்து செய்ததை போல் பாரபட்சமின்றி அனைத்து வழக்குகளிலும் இது நிலைநாட்டப்படுமேயானால் தனிப்பட்ட முறையில் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.  ஆனால் இதில் எதற்காக முக்கிய குற்றவாளியான பெண்ணின் தந்தை விடுதலை செய்யப்பட்டார் என்பது சற்றும் விளங்கவில்லை.(தீர்ப்பை வாசிக்கவில்லை) . முக்கிய குற்றவாளியாக உள்ள நபரை விடுதலை செய்தததை கண்டிப்பாக ஆட்சேபிக்கிறேன்.  

மீண்டும் #நீதி நிலை நாட்டப்படும் என நம்புவோம்... மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர் பார்ப்போம் .

Tuesday, June 2, 2020

விதைக்கப்பட்ட புரட்சிகள் மரமாகும்

ஒரு சமூகம் முறையான முன்னேற்றம் கண்டுள்ளது , அதன் வளர்ச்சி மனித உணர்வுகளை மிக முதிர்ச்சியாக கையாள உதவியிருக்கிறது என்பதை  ஒரு இன மக்கள் மற்றொரு இன மக்களுக்கு ஆதரவாக , அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் செய்த குற்றத்திற்காக களமாட வைத்ததிலிருந்து தெரியவரும். அதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை நியாயப்படுத்தவில்லை. ஆண்டாண்டு காலமாக நடந்தேறி வரும் நிறவெறிக்கு எதிராக அதனை தொடுத்த இனத்தை சேர்ந்த மக்களே அந்த தாழ்ந்த உணர்வுகளை தூக்கியெறிய முன்வந்து விட்டார்கள்.  புரட்சி என்பது இன்று தொடங்கி நாளை நடந்தேறுவதில்லை.  அது ஒரு மரம் போன்றது விதைத்து, முளைத்து, தளிர்ந்து பூவாகி கனியாகுவது போல் காலம் தான் பதிலளிக்கும்.  அந்த பதிலை தான் தற்போது அமெரிக்க மக்கள் கூறி வருகின்றனர். மார்டின் லூதர் கிங்கிற்கு பிறகு இன துவேசத்தினால் இறந்த ஒருவரின் இறப்பு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் இருந்து இதனை அறிந்துக்கொள்ளலாம். கள்ளநோட்டு தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ் ப்ளாய்ட் காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அது அவரின் குரல்வளை அல்ல. ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இனத்தினுடையது. இத்தனைக்கும் இறந்த ப்ளாய்ட், மார்டின் போல தலைவரும் இல்லை, புரட்சியும் செய்யவில்லை. சாமானியர் தான். பின் ஏன் இத்துனை போராட்டம் என்றால் ? மக்கள் தெளிவடைந்து விட்டனர். தாங்கள் செய்து வந்து உணர்வளிப்பு நிலையை தங்களுக்கு நேர்வதாக உருவகப்படுத்தி பார்க்கும் அளவிற்கு பக்குவமடைந்து இருக்கிறார்கள். ஒரு மனிதனை தாழ்நிலைக்கு தள்ளிய குற்றவுணர்ச்சிகளை கண்ணாடி போல சுக்கு சுக்காக உடைக்க துணிந்து விட்டனர். அதனால் தான் சாமானியனாக இருந்தாலும் அவன் இறப்பின் காரணத்தை மையப்படுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை மட்டும் தான் ஒரு போராட்டமோ, புரட்சியோ செய்ய வேண்டும்.  அப்போது தான் அது சரியானவற்றை எல்லாம் மட்டும் முன்னெடுத்து சென்றுள்ளது என்று உணரலாம். ப்ளாய்டின் மரணம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பதிலை காயிலிருந்து கனியாக மாற்ற வித்திட்டிருக்கிறது.

இது இந்தியாவில் சாத்தியமா  ? என்றால் .. நிச்சயமாக சாத்தியமே. வர்க்க போராட்டம் உலகில் இரு வேறு விசயங்களை வைத்து வந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. முதலாளி- தொழிலாளி, நிறவெறி போன்று.  ஆனால் இந்தியாவில் அவ்வாறில்லை, இங்கு வர்க்கங்களுக்குள் வர்க்கம், அதற்குள் ஒரு வர்க்கம் என தொடர் சங்கிலி போல் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மொழி , இனம் , மதம் , சாதி என பல்வேறு தீர்வு காணவேண்டிய பிரச்னைகள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்துவது இந்த தேசம் பல்வேறு தரப்பட்ட மக்களின் உணர்வுகளை ஒன்றினைக்கும்  காரணி என்பதிற்காக மட்டுமே . இது அனைத்து தரப்பு மக்களையும் ஒற்றுமையாய் செயல்பட வைக்க தான் அன்றி அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை சகித்துக்கொண்டு செல்ல வேண்டும் எனபதற்காக அல்ல. இங்கு பெரிதாக முன்னெடுத்து வரப்பட்ட மத துவேசங்கள் பல்வேறு படிநிலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பதும் உண்மைதான். அதற்கடுத்த இலக்காக உள்ள சாதிய வர்க்கத்தை உடைக்க இங்கு முன்னெடுக்கப்பட்ட அத்துனை போராட்டங்களுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்து தான் இருக்கிறது.  ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மற்ற சமுதாயத்தை சார்ந்தவர் வன்கொடுமையோ அல்லது குற்றச்செயலோ செய்திருந்தால் அதற்கெதிராக இங்கு ஒலிக்கும் குரல்களை சாதிய சார்புடையவர்கள் வசவு செய்யும் சத்தம் போதாதா இங்கு விதைத்த விதை மரமாகி விட்டது என்பதை உணர்த்த.... அமெரிக்காவில் நிறவெறி துவேசத்தை அனுபவித்த இனத்தில் இருந்து ஆளும் மனிதர்கள் வந்தனர்.  இனியும் வருவார்கள். அதேப்போல் இந்த தேசத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆளுகைக்கு வருவார்கள். துவேசத்தில் ஈடுபட்ட மக்கள் உணர்வு ரீதயான பக்குவமடைவார்கள். குற்றவுணர்களில் இருந்து வெளிவர ஆயுத்தமாகியிருக்கும் கூட்டம் அதை நிச்சயம்  செய்யும்.

விரைவில் பூ வைக்கும் !
காய் காய்க்கும்
கனிவதை பார்ப்போம்...

Thursday, April 30, 2020

உரிமை மறுக்காதே

நவீன தீண்டாமையாக நுழைவுத்தேர்வுகள் செயல்பட இருக்கின்றன. பள்ளி சிறுவர்களுக்கு பொதுத்தேர்வு,  மருத்துவம் , பொறியியல் , கலை என அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நுழைவுத் தேர்வு என கல்வி உரிமையை மறுப்பது தேசிய குற்றம். 
குலக்கல்வி முறைக்கு கொண்டு செல்லும் காலக்கடத்திகள் அல்லவா இவை. திறமைசாலிகளை உருவாக்குவது இதன் நோக்கமாக நிச்சயம் இராது. ஏழை, எளியோரையும் மனுதர்மத்தில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களையும், ஓரங்கட்டப்பட்ட மக்களையும், கல்வியறிவில் நசுக்கவும், முன்னேற்றத்தையும் முற்போக்கு தனத்தையும் அடியோடு சாய்க்கவும் செய்யும்  தரமற்ற செயல். சாமானிய மக்களின் கல்வியை பாதிக்கும் எந்த செயலும் மக்கள் விரோதமானதே.  பட்டப்படிப்பு என்பதை பட்டவர்த்தனமாக மேல்தட்டு மக்களும், குறிப்பிட்ட சாதீய மற்றும் பொருளாதார முன்னேற்றம் கொண்டோர்கள் மட்டுமே கற்கும் கூடாரமாக்கி போகவல்லது. சிறார் பொதுத்தேர்வு தொடங்கி பட்டப்படிப்பு வரை இடை நிற்றல் , உளவியல் பயங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  என கல்வி முற்றிலும் எட்டாக்கனியாகும். பெரும்பகுதி சாமானிய மக்களால் இயங்கும் தேசத்தில் அவர்களுக்கு அடிப்படையான கல்வி உரிமையையே பறிக்கும் இந்த செயல் அரசமைப்புக்கு எதிரானதும் தான். 

இதில் இந்தி மொழி தெரியாத மக்களின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. அவர்களுக்கு எதிலெல்லாம் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமோ அதையெல்லாம் எளிதாக நிறைவேற்றி விடுகிறார்கள்.  படித்த பாடதிட்டம் ஒன்று நுழைவுத்தேர்வை சந்திக்கும் பாடத்திட்டம் ஒன்று . நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு மற்றோருக்கெல்லாம் ஆடை களைந்து சோதனை. அதற்குத்தானே ஒரே பாடத்திட்டம் என அடிப்பட்ட செம்பை தூக்கி கொண்டு வருவார்கள் சிலர், அதையே தான் நானும் சொல்கிறேன் எங்கள் பாடத்திட்டத்தை ஒட்டுமொத்த தேசிய பாடத்திட்டமாகத்தான் அறிவியுங்களேன்.  குறை இருக்கும் இடத்தில் மெருகேற்றுங்களேன் .!? செய்யமாட்டார்கள் தானே. அதுவும் இல்லையென்றால் நீங்கள் கூறும் பாடத்திட்டத்தை மாகாண மொழிகளில் வெளியிட்டு நடத்துங்கள். நுழைவுத்தேர்வை மொழிவாரியாக நடத்தாமல் இந்தி, ஆங்கிலம் என இரட்டை மொழிகளிலேயே நடத்துவது இந்தி தெரியாத மக்களுக்கு ஒன்றிய அரசு செய்து வரும் மாபெரும் துரோகம். (கலைகல்லூரி நுழைவுத்தேர்வு மாகாண மொழிகளில் நடக்கும்) தாய்மொழியில் புரிந்து பதில் எழுதுவதற்கும் மாற்று மொழியில் ஏற்படும் புரிதலுக்குமான வித்தியாசம் தூரமே. இது இந்தி மொழி மாணவர்களுக்கு சாதகமானதாகவே உள்ளது. இதுவே சமநிலை இல்லாத செயல்முறை தான். ஒருமைபாடற்றதும் தான் . ஏற்கனவே நாட்டில் உள்ள பெரும் உயர் கல்வி நிறுவனங்களில் எளிய மாணவர்களும் , மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குமான வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது. 
இந்த நிலையில் மாநில கல்லூரிகளில் பயில்வதற்கும் தடைகளை ஏற்படுத்தினால் நாங்கள் எங்கே செல்வது ? போட்டிகள் இருந்தால் தானே இடஒதுக்கீட்டை செயல்படுத்த நேரிடும். போட்டிகள் இல்லாத பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இடஒதுக்கீட்டை புறந்தள்ள கூடிய சாத்தியங்கள் இருக்கும் அல்லவா. சமதர்மம், சமூக நீதியை நிலைநாட்டப்பட வேண்டிய அரசே இவ்வாறு செய்வது எவ்வகை நியாயம் ? அரசியலமைப்பையும் ,  ஜனநாயகத்தையும் மதிக்காத அரசின் செயல்பாடுகளை எவ்வாறு ஏற்க இயலும் ??? 

Saturday, March 7, 2020

போய்ட்டே இருங்க மனிதிகளே ..,

பெண்கள் மீதான பல கற்பிதங்களை , அடக்குமுறைகளை தொன்றுத்தொட்டு முன் வைத்து விட்டோம் . ஆண்டாண்டு காலமாக இங்கு ஒரு இனமே ! முழுவதுமாக அடக்கி ஆளப்பட்டுவிட்டது. 
அடக்கி வைத்த அத்துனை உணர்வுகளும் தற்போது வெளி வந்து கொண்டிருக்கிறது . அவ்வளவுதான்.  பெண்ணியம்னா இதலாமா? இப்படியா பண்ணுவாங்க, என்றெல்லாம் பேச அவசியமே இல்லை. 25 வயது வரை அப்பா, அம்மா கண்காணிப்பில் வளர்ந்த ஒரு ஆண் அதைவிட்டு வெளிய வருகையில் தனக்குள் மறைத்து வைத்த எவ்வளவோ விஷயங்களை செய்ய முற்படுகிறான் (அடியேனும் அப்படியே). குறைந்தது ஆசையாவது படுகிறோம்.  சிந்தித்து பாருங்கள், இவர்கள், நம்ம அப்பத்தா அதுக்கு அப்பத்தா அதுக்கு அப்பத்தானு எத்தனை தலைமுறையோட உணர்வுகளையும், உரிமையும் அடிச்சு ஒடுக்கி வைத்திருந்தார்கள் என்று. இத்தனையின் மொத்த வெளிப்பாடு தான், தற்போது  பலரால் உடன்பட இயலாத மனிதிகளின் அழகான அட்டூழியங்களும். ...,
சுதந்திரமாக இருக்க வேண்டும், அது கட்டுப்பாடான சுதந்திரமாகவே  இருக்க வேண்டும் என சிலர் கிளம்புவார்கள்.   அதென்ன கட்டுபாடுடைய சுதந்திரம் ? கட்டுபாடற்ற சுதந்திரம் ?
சுதந்திரம் என்றாலே விதிவிலக்கு அற்றது தானே ?  
அப்புறம் என்ன புடலங்கா வியாபாரம் எல்லாம் ?  
25 வருட தனிமனித உரிமைகளையும், உணர்வுகளையுமே கட்டுப்படுத்தி பின் வெகுண்டெழ நாம் எண்ணுகையில் , !
தலைமுறை தலைமுறையாய் அடக்கி வைத்தனவற்றை அப்பத்தாக்கள் சார்பாகவும் சேர்த்து தற்போது வெளிப்படுத்த தானே செய்வார்கள். அதில் எப்படி நாகரீகம், பண்பாடு சர்ச்சை, சண்டி பேச்சு சாம்பார்கள் எல்லாம் வருகிறது. 
பொண்டாட்டிகிட்ட அடிவாங்குறது கூட இவ்ளோ நாளா நம்ம தாத்தனுங்க செஞ்சதோட வெளிப்பாடா தான் இருக்குமோ என தோன்றலாம்.  
நிர்வாகம் பொறுப்பல்ல...
தனக்கு தெரியாமல் அல்லது தனக்கு தேவையில்லாத எந்த ஆணிகளையும் அவர்கள் புடுங்குவதேயில்லை என்பதால், வெற்று பிதற்றல்களையும், அடிமைத்தனத்தை உடைத்து வெளியே வந்ததை ஏற்றுக்கொள்ள இயலாத தியாக உள்ளங்களையும் முடிந்தவரை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவும், இல்லையென்றால் 
மூடிக்கொண்டு சேர்ந்து பயணிக்க பழக்கப்படுத்தி கொள்வோமாக என கூறிக்கொண்டு,

போய்ட்டே இருங்க மனிதிகளே.... வாழ்த்துகள் .... ❤🖤