Thursday, April 30, 2020

உரிமை மறுக்காதே

நவீன தீண்டாமையாக நுழைவுத்தேர்வுகள் செயல்பட இருக்கின்றன. பள்ளி சிறுவர்களுக்கு பொதுத்தேர்வு,  மருத்துவம் , பொறியியல் , கலை என அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நுழைவுத் தேர்வு என கல்வி உரிமையை மறுப்பது தேசிய குற்றம். 
குலக்கல்வி முறைக்கு கொண்டு செல்லும் காலக்கடத்திகள் அல்லவா இவை. திறமைசாலிகளை உருவாக்குவது இதன் நோக்கமாக நிச்சயம் இராது. ஏழை, எளியோரையும் மனுதர்மத்தில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களையும், ஓரங்கட்டப்பட்ட மக்களையும், கல்வியறிவில் நசுக்கவும், முன்னேற்றத்தையும் முற்போக்கு தனத்தையும் அடியோடு சாய்க்கவும் செய்யும்  தரமற்ற செயல். சாமானிய மக்களின் கல்வியை பாதிக்கும் எந்த செயலும் மக்கள் விரோதமானதே.  பட்டப்படிப்பு என்பதை பட்டவர்த்தனமாக மேல்தட்டு மக்களும், குறிப்பிட்ட சாதீய மற்றும் பொருளாதார முன்னேற்றம் கொண்டோர்கள் மட்டுமே கற்கும் கூடாரமாக்கி போகவல்லது. சிறார் பொதுத்தேர்வு தொடங்கி பட்டப்படிப்பு வரை இடை நிற்றல் , உளவியல் பயங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  என கல்வி முற்றிலும் எட்டாக்கனியாகும். பெரும்பகுதி சாமானிய மக்களால் இயங்கும் தேசத்தில் அவர்களுக்கு அடிப்படையான கல்வி உரிமையையே பறிக்கும் இந்த செயல் அரசமைப்புக்கு எதிரானதும் தான். 

இதில் இந்தி மொழி தெரியாத மக்களின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. அவர்களுக்கு எதிலெல்லாம் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமோ அதையெல்லாம் எளிதாக நிறைவேற்றி விடுகிறார்கள்.  படித்த பாடதிட்டம் ஒன்று நுழைவுத்தேர்வை சந்திக்கும் பாடத்திட்டம் ஒன்று . நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு மற்றோருக்கெல்லாம் ஆடை களைந்து சோதனை. அதற்குத்தானே ஒரே பாடத்திட்டம் என அடிப்பட்ட செம்பை தூக்கி கொண்டு வருவார்கள் சிலர், அதையே தான் நானும் சொல்கிறேன் எங்கள் பாடத்திட்டத்தை ஒட்டுமொத்த தேசிய பாடத்திட்டமாகத்தான் அறிவியுங்களேன்.  குறை இருக்கும் இடத்தில் மெருகேற்றுங்களேன் .!? செய்யமாட்டார்கள் தானே. அதுவும் இல்லையென்றால் நீங்கள் கூறும் பாடத்திட்டத்தை மாகாண மொழிகளில் வெளியிட்டு நடத்துங்கள். நுழைவுத்தேர்வை மொழிவாரியாக நடத்தாமல் இந்தி, ஆங்கிலம் என இரட்டை மொழிகளிலேயே நடத்துவது இந்தி தெரியாத மக்களுக்கு ஒன்றிய அரசு செய்து வரும் மாபெரும் துரோகம். (கலைகல்லூரி நுழைவுத்தேர்வு மாகாண மொழிகளில் நடக்கும்) தாய்மொழியில் புரிந்து பதில் எழுதுவதற்கும் மாற்று மொழியில் ஏற்படும் புரிதலுக்குமான வித்தியாசம் தூரமே. இது இந்தி மொழி மாணவர்களுக்கு சாதகமானதாகவே உள்ளது. இதுவே சமநிலை இல்லாத செயல்முறை தான். ஒருமைபாடற்றதும் தான் . ஏற்கனவே நாட்டில் உள்ள பெரும் உயர் கல்வி நிறுவனங்களில் எளிய மாணவர்களும் , மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குமான வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது. 
இந்த நிலையில் மாநில கல்லூரிகளில் பயில்வதற்கும் தடைகளை ஏற்படுத்தினால் நாங்கள் எங்கே செல்வது ? போட்டிகள் இருந்தால் தானே இடஒதுக்கீட்டை செயல்படுத்த நேரிடும். போட்டிகள் இல்லாத பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இடஒதுக்கீட்டை புறந்தள்ள கூடிய சாத்தியங்கள் இருக்கும் அல்லவா. சமதர்மம், சமூக நீதியை நிலைநாட்டப்பட வேண்டிய அரசே இவ்வாறு செய்வது எவ்வகை நியாயம் ? அரசியலமைப்பையும் ,  ஜனநாயகத்தையும் மதிக்காத அரசின் செயல்பாடுகளை எவ்வாறு ஏற்க இயலும் ??? 

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சரியான கேள்வி? அருமை நண்பா..கூடிய விரைவில் எல்லாம் மாறும்...

    ReplyDelete