Saturday, July 30, 2022

செஸ் ஒலிம்பியாட் 2022


ஒவ்வொரு சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடுகள் அந்த வருடம் மற்றும் அதன்பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை சற்று அதிகமாகவே ஈர்த்துள்ளது. அந்நிய முதலீட்டு வளர்ச்சிக்கான முழுமையான காரணங்களாக இவற்றை கருத முடியாது என்றாலும் முதலீடுகளை ஈர்ப்பதில் இவை முக்கிய பங்கு வகித்துள்ளதையும் மறுக்க முடியாது. சாதாரணமாக அந்நிய முதலீடுகளை கணக்கிடுவதில் இருந்து அந்நாடுகள், இவ்வகையான சர்வதேச போட்டிகள் முடிந்த பிறகு அந்நிய முதலீடுகளை சற்று அதிகமாகவே ஈர்த்துள்ளது. இதற்காக, இதற்குமுன் நடந்த ஒலிம்பிக் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்த ஒரு சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, உலக வங்கியின் FDI Reportன் படி ஒப்பீட்டளவில் பார்த்தால் இது புரியவரும். அதன் பிறகான வீழ்ச்சிகளையும் பல நாடுகள் சந்தித்துள்ளன. ஆனால் அதற்கு உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாகவும் இருந்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அந்நிய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய ஒன்றிய அளவிலும் ஈர்ப்பதற்கான அதிக காரணிகளை கொண்டுள்ளது. அந்நிய முதலீடுகளை இந்தியாவுடன் சமவிகித அளவில் ஈர்த்து வரும் நாடுகளை விட ஒரு புள்ளி அளவிற்காவது அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் நிச்சயம் முன்னேறும். அதற்கு செஸ் ஒலிம்பியாட் தவிர்க்க முடியாத காரணமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையில் இதுவரை இருந்து வந்த நிலையை விட சற்று அதிகமான பொருளாதார வளர்ச்சியையும் , வேலைவாய்ப்பையும் உண்டாக்கவிருக்கிறது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னும் - 2021 பிற்பகுதிக்கு பின்னரும் வெளிநாட்டினரின் வருகையை மையமாக வைத்து சுற்றுலாத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், அளிப்பதிலும் உலகளவில் இந்தியா 2வது இடத்திலும் , மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஒலிம்பியாட்டுக்கு பின்னான ஒட்டுமொத்த இந்திய சுற்றுலாத்துறை சார்ந்த தரவரிசையிலும், பொருளாதாரத்திலும் நிகழும் மாற்றங்களுக்கும் , வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முக்கிய காரணமாக இருப்பார்கள்.

வளர்க !!

Tuesday, July 26, 2022

தற்கொலைகள் கொலைகளே

எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் 2k கிட்ஸ் என தொடர்ச்சியாக மீம் மற்றும் பதிவுகளை காண நேர்ந்தது.

NCRB அறிக்கையின் படி தமிழ்நாட்டில் 1991-2000 வரை சராசரியாக ஆண்டிற்கு 9,540 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள்.(உயிரிழப்புகளும் அடங்கும்). இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 10.11 சதவீதம்.

2001- 2010 வரை சராசரியாக ஆண்டிற்கு 13,084 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 10.96 சதவீதம்.

2011- 2020 வரை சராசரியாக ஆண்டிற்கு 15,503 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 11.43 சதவீதம்.

இந்த தற்கொலை விகிதங்களை பார்த்தால் அப்போதிருந்து இப்போது வரை எண்ணிக்கை அளவில் ஆண்டுதோறும் உயர்வு இருந்து கொண்டே தான் உள்ளது. கடந்து 30 வருடங்களை ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் அதிகரிக்கும் எண்ணிக்கை அளவில் விகிதம் குறைந்து தான் உள்ளது.

2k கிட்ஸ் முடி வெட்ட சொன்னால், யூனிபார்ம் போட சொன்னால் , சாப்பிட சொன்னால், பள்ளி கல்லூரிக்கு சீக்கிரம் வர சொன்னால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என 80s ம்/ 90s ம் இஷ்டத்துக்கு பேசி நகைப்பது வேடிக்கையாக உள்ளது. வீட்ல உன்னை குப்பை தொட்டில இருந்து எடுத்து வந்தோம்னு கதை விட்டதுக்குலாம் பூச்சி மருந்த தண்ணீல கலந்து குடிச்சவனுங்க தான நாமலாம். உங்களுக்கு அப்போ மிகப்பெரிய பிரச்னையா காதல் தோல்வியா இருந்ததுனா ! இப்போ உள்ளவங்களுக்கு அது வேற ஒண்ணா மாறியிருக்கு அவ்ளோதான்.

கல்வி சூழலால் ஏற்பட்ட தற்கொலை முயற்சிகளின் விகிதம் கூட 1990-2010 ஐ விட 2010-2020ல் அதிகமாக உள்ளது. அப்போ நீங்க வாழ்க்கையா நினைச்சு உசுர விட துணிஞ்சது வேற ஒண்ணு . அவன் இப்போ வாழ்கையா நினைக்குறதுல வேற ஒண்ணுக்கு முக்கியத்துவத்தை கொடுக்குறான். அதுக்காக தற்கொலை தான் வழினு சொல்லல. அவன் எதுக்காக சாகுற அளவுக்கு போறன்ங்குற உளவியல் காரணம் ரொம்ப முக்கியம். அப்போதான் சரி செய்ய முடியும். இளமை பருவத்துல உள்ள மனச்சிக்கல்களை சரிசெய்ய அரசுடன் இணைந்து நாமும் முயற்சிக்க வேண்டிய தருணங்கள் தான் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடக்குற சூழல்கள் எல்லாம் . அதைவிட்டு எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்யுறாய்ங்கனு நக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கு.? அவனு/ளுக்கு முன்னே நீங்க காரணமா சொன்ன எல்லாத்தையும் கடந்து வரது எளிதா இருக்கு. ஆனா இதலாம் ஒரு பிரச்னையானு நீங்க இப்போ நினைக்கிற ஒண்ணு அவனை/ளை மோசமா பாதிக்குது. அப்போ அதோட தீவிரத்தை குறைக்கவும் , அறியாமையை தெளிவுப்படுத்தவும் வேண்டிய கடமை நமக்கும் இருக்கு தானே. அட அதுக்கூட வேணாம், அப்படி செய்ய முடியலனாலும் அதை ரொம்ப சாதாரணமா பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை தான். இப்போ மயிறு வெட்றதுலாம் பிரச்னையான தூக்கினு சுத்துற. மயிறு வெட்றதுல பிரச்னை இருக்குனு அவன்/ள் சொன்னா அதை சரிசெய்யனும், அதுதான் ஒரு அறிவு முதிர்ச்சியடைந்த சமூகம் செய்ய வேண்டியது. அதைவிட்டுட்டு தற்கொலை செஞ்சிட்டு அங்க ஒருத்தி செத்து கிடக்குறப்போ இவனுங்களுக்கு அப்படி என்ன மீம போட்டு நொட்டுறதுல இருக்குனு புரியல. அதோட அவனுங்க எட்டிகூட பாக்காத இந்த fbல போட்டு புரண்டுட்டு இருக்கானுங்க. யாருக்கு என்னத்தடா சொல்ல வறீங்க. இதுல கொடுமை என்னனா , பொறுப்புமிக்க நபர்கள் பலரும் கூட அதை செய்றது தான். அதீத வருத்தமாவும் இருக்கு.

முதல்ல 11 கழுதை வயசான நீங்க வளருங்கடா அப்பறம் வந்து அவனுங்கள வளரச் சொல்லலாம்.. 

என்னை பொறுத்தவரை தற்கொலைனு ஒண்ணு கிடையாது. அதுலாம் கொலை தான். அதுக்கு காரணத்தை கண்டுபிடிச்சு தண்டிக்க வேண்டியதும், சரிசெய்ய வேண்டியதும் இந்த ஒட்டுமொத்த சமூகத்தோட பெருங் கடமை தான். 
கொலை குற்றவுணர்ச்சிகளுக்கு எங்களை ஆளாக்கிடாதீங்க புள்ளைங்கள. எந்த பிரச்னைனாலும் சரி பண்ணிக்கலாம். உசுரை மாச்சிக்குறதுலாம் தீர்வு இல்ல.

Friday, July 1, 2022

தரவரிசையால் தடைபடாத வளர்ச்சி

(BRAP)மாநில வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டத்தை, 301 சீர்திருத்தங்களுடன் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் (EODB) எளிதாக தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசுகள் உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இது உதவியது. மேலும் இனி வரும் காலங்களில் இதன் தரவரிசை நிலைகள் 2020 செப்டம்பர் முதல் புதிய திருத்தங்களுடன் 15 பிரிவுகளில் 301 காரணிகளின் செயல்பாடுகளை கொண்டு அளவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் BRAP உறுப்பினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கருத்துகள் அடிப்படையிலும் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பட்டியலானது 2020ம் ஆண்டிற்கானது. மேலும் இதில் 9 பிரிவுகளில் உள்ள 72 சீர்திருத்தங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   இதில் 97.89% பெற்று ஆந்திரா முதல் இடத்திலும் , 97.77% பெற்று குஜராத் இரண்டாவது இடத்திலும் , 96.97% பெற்று தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும்  உள்ளது. 

 2021 மற்றும் 2022ம் ஆண்டிற்கான EODBல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பன்மடங்கு முன்னேறி செல்லலாம், அதே சமயம் அடுத்த வருட BRAP தரவரிசையில் அவை அதல பாதாளத்திற்கும் கூட செல்லலாம். காரணம் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட  சட்டங்களை தமிழ்நாடு, கேரளா , மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றாது என ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்தாண்டு BRAPல் இவை உட்பட 15 பிரிவுகளில் உள்ள 301 சீர்திருத்தங்களையும் கருத்தில் கொண்டே தரவரிசை வெளியிடப்படும் போது, அவற்றில் பல்வேறானவற்றை தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களால் நடைமுறைப்படுத்த/ ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள நிலையில், இவைகள் BRAPல் அடிப்படை தகுதி நிலைகளாக தொடர உள்ளன.  எனவே அடிப்படை தகுதி நிலைகளை சரிவர பின்பற்ற இயலாத காரணத்தால் தரவரிசையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் பின்னோக்கி செல்லலாம். ஆனால் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதி கவனம் செலுத்தி ஊக்குவிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை இந்த தரவரிசை தடுத்துவிடாது.