50% இடஒதுக்கீட்டை உள்ளாட்சியில் வழங்கினாலும், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என எண்ணிக்கையில் ஓரளவிற்காவது சாத்தியப்படுத்தும் அளவிற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், கட்சி ரீதியாக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இன்றளவும் உள்ளன. பெண்களை கோயில் கருவறைக்குள் செல்வதை சாத்தியப்படுத்திய நம்மால் அதிகார பொறுப்புகளில் அவர்களை அமர்த்துவதில் சறுக்கலை சந்திக்கிறோம்.
அமைச்சரை விட மாவட்டத்திற்குள் வலுவான அதிகாரத்தை கொண்டிருக்கும் மாவட்ட செயலாளர்களில் பெண்களை நியமிப்பதில் மன ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. வேட்டியை மடிச்சு கட்டி மல்லுக்க நிற்குற காலத்துலயே தங்கிட்டோமோங்குற எண்ணம் இயல்பாவே தொத்திக்குது. ஒருவேளை அப்படியே இருந்தாலுமே "சேலையை ஏத்தி சொருகி" போடா பொடலங்கானு சொல்ல முடியாத நிலையில பெண்கள் ஒண்ணும் இன்னைக்கு இல்ல.
கட்சிக்காக களத்துல இறங்கி வேலை செய்யுறதுல ஆண்களோட ஆதிக்கமோ/பங்களிப்போ அதிகமா இருக்குறதால பெண்களை நியமிக்குறதுல நடைமுறை சிக்கல்கள் இருக்கு. இதுல முதன்மையா இருக்குற 4 பிரச்னைகளா எதை பாக்கலாம்னா : 1) ஆண்களுக்கு இருக்குற ஆதிக்க மனப்பாங்கு. பெரும்பாலும் கட்சி கள நடவடிக்கையில ஆண் இருக்குறப்போ பெண்ட்ட போய் நின்னு பேசுறதுக்கு இருக்குற மனக்குறைபாடு.(பொதுப்புத்தியில மண்டிக்கிடக்குற அழுக்கு அது, பெண் விடுதலை பேசுற கட்சில இருக்குறவங்க எல்லாரும் அதை தீர்க்கமா பின்பற்றுவாங்கனு எதிர்பார்க்க முடியாது. ) 2) பெண்களோட பொருளாதார சுதந்திரம் 3) போராட்டம், அதனால சிறைக்கு போகக் கூடிய சூழல்ல பெண்கள் அதை எப்படி சமாளிப்பாங்க, அவங்க சமாளிச்சாலும் அதனால கட்சிக்கு ஏற்படுற சிக்கல்களை, கட்சி எப்படி சமாளிக்கும்ங்குற யோசனை? 4) தேர்தல் அரசியல் இல்லாம இயக்க அரசியல்ல களமாடுறதுல பெண்கள் ஈடுபடுறதுல உள்ள தயக்கம்/ ஓரங்கட்டப்படுற நிலைமை. இது 4ம் என்னோட பார்வையில இருந்து முதன்மையான காரணமா இருக்கு.
இது 4த்துல பெண்கள் தங்களை தாங்களே வலுப்படுத்திக்க வேண்டிய இடம் பொருளாதார சுதந்திரம். அதிகாரத்தை அடைய அதை அவங்க சாத்தியப்படுத்திப்பாங்க. மீதி எல்லாத்துலயும் சமூக மாற்றங்கள் தேவை. ஆனா அதிகாரத்தை வழங்குனப்பறம் தான் கட்சி ரீதியா அது நடக்க தொடங்கும்னு நம்புறன். அதிகார பொறுப்புகளை பெண்களுக்கு வழங்குற முடிவுல முதல்ல கட்சி தலைமை தயாராவும், திடமாவும் இருக்கனும். பொறுப்புகளை அடையப்போற பெண்களை விட கட்சி தலைமைக்கு தான் இது மிக இக்கட்டான சூழல்களை உருவாக்கும்ங்குறதையும் ஏத்துக்க தான் வேணும்.
தேர்தல் அரசியல்ல பெண்களை முன்னாடி கொண்டு வரதுல இருக்கு அக்கறையை கூடுதலாக்க வேண்டியதும், கட்சி அரசியல்ல பெண்களை முன்னாடி கொண்டு வர தீவிரமான, திடமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியதும் அவசியம். பெண் மாவட்ட செயலாளர் என்பதை ஆட்சியில் இருக்கும்/இருந்த கட்சிகள் மேற்கொள்வது மற்ற கட்சிகளை விடவும் ரொம்ப சிரமமான காரியமாக தான் இருக்கும். விசிகவில் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் 10% பெண்களுக்கு என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த மே மாதம் அறிவிச்சது சிறப்பான முன்னெடுப்பு.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1990களோட பிற்பகுதியிலேயே திமுகல முதல் பெண் மாவட்ட செயலாளராக வாசுகி முருகேசன் இருந்தாங்க. அவங்க தொடர்ந்து மூன்று முறை கரூர் மாவட்ட செயலாளாராக இருந்தாங்க. அதுக்கப்பறம் விழுப்புரம் மாவட்ட செயலாளரா இருந்த அங்கயர்கண்ணி, வேலூர் மாவட்ட செயலாளாரா இருந்த முத்தமிழ் செல்வி, கோவை மாவட்ட செயலாளரா இருந்த விஜயலெட்சுமி பழனிச்சாமி, இப்போ தூத்துக்குடி மாவட்ட செயலாளரா இருக்க அமைச்சர் கீதா ஜீவன்னு ஒரு சிலர் அந்த பொறுப்புகள்ல அமர்த்தப்பட்டாங்க. அதோட 2014ல 5 பெண் மாவட்ட செயலாளர்களை நியமிக்க கலைஞர் முடிவு எடுத்திருக்குறதா பேசப்பட்டுச்சு. கட்சியின் அதிகார பொறுப்புகள்ல பெண்களை கொண்டு வரதுல மற்ற யாரையும் விட கலைஞருக்கு அதிகமான சிந்தனை இருந்துச்சு. ஆனா அப்போ வந்த தேர்தல் முடிவுகள், சூழல், கட்சி நிர்வாகிகளுக்குள்ள இருந்த சலனங்களால அந்த முடிவுகள் கைவிடப்பட்டதாவும் கூறப்பட்டுச்சு. ஆட்சியிலும், கட்சியிலும் "பெண்" தலைமையை கொண்டு இயங்கிய கட்சியா அதிமுக இருந்தாலும், இப்போ தான் முதல் முறையா ஒரு பெண் மாவட்ட செயலாளரா நியமிக்கப்படுறாங்க.
எம்எல்ஏ,எம்பி,அமைச்சர் என ஆளுமை மிக்க பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும், மாவட்ட செயலாளர் போன்ற கட்சியின் அதிகாரமிக்க பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவதை இனிமேலாவது சாத்தியமாக்க கட்சிகள் துணிச்சலான முடிவுகளை எடுக்கனும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்னு பெரியார் சிந்தனையை சாத்தியமாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின், பெண்களுக்கு கட்சியில அதிகார பொறுப்புகளை வழங்கனும்னு நினைச்ச கலைஞரோட சிந்தைனையையும், திமுக தலைவர்ங்குற முறையில ஸ்டாலின் சாத்தியப்படுத்தனும். பெண் தலைமையை ஏற்று தமிழ்நாட்டையும், அதிமுகவையும் நீண்ட நாட்கள் ஆட்சி செய்த கட்சியோட இப்போதைய பொதுச்செயலாளராக இருக்குற எடப்பாடி பழனிச்சாமி இன்னும் அதிக பெண்களை அதிகார பொறுப்பில் அமர்த்த முயற்சிக்க வேண்டும். அதிகார பரவலாக்கம் என்பது பெண்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படுவது தான்.
No comments:
Post a Comment