Thursday, September 29, 2022

பேசுப்பொருளாகி இருக்க வேண்டியது காண்டமா ? பாகிஸ்தானுக்கு போங்குறதா ?

பீகாரின் குழுந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனரான ஹர்ஜோத் கவுர் பம்ரா IAS, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதில் மாணவி ஒருவர் " பள்ளியில் மோசமாக உள்ள கழிப்பறை குறித்தும், அரசு பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்குவது ?" குறித்தும் கேள்வி எழுப்புகிறார். 

அதற்கு பதிலளித்த அந்த பெண் அதிகாரி இப்போ நாப்கின் கேட்குறீங்க, அப்பறம் ஜீன்ஸ் கேட்பீங்க , அப்பறம் ஷீ கேட்பீங்க , அடுத்து காண்டம் , குடும்ப கட்டுப்பாடுனு அரசுட்டயே எல்லாத்தையும் கேட்பீங்களானு சொன்னவுடனே,

அங்க இருந்த மாணவிகள்லாம் அதுக்கு தான ஓட்டு போடுறோம்னு கத்திருக்காங்க.

உடனே அந்த அதிகாரி , இதுக்காகலாம் நீங்க ஓட்டு போட வேணாம், பாகிஸ்தானுக்கு கிளம்புங்கனு சொல்லிருக்காங்க.

இதுக்கு எதிர்ப்பு , விளக்க கடிதம்னு பிரச்னை தொடர்ந்து போயிட்டுயிருக்கு.

இங்க நாம கவனிக்க வேண்டியதும் பேச வேண்டியதும் அந்த பொண்ணோட குரலை தான். ஆனா அந்த அதிகாரி சொன்ன பாகிஸ்தானுக்கு போங்குறத தான் நாம பிரதானமா எடுத்துக்கிறோம். இங்க ஒரு கூட்டம் எதுக்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு போ, அர்பன் நக்சல், தேஷ்விரோதிஸ்னு தொடர்ந்து சொல்லிட்டே இருக்கும். ஆனா நாம அதை எதிர்க்குறதா நினைச்சிட்டு , இந்தப்பக்க உரிமையையும், தேவையையும் கேட்டுட்டு இருக்கவங்களோட குரலை இரண்டாம் பட்சமா பாக்குறோம். அது தான் பிரச்னை. அதுவும் தான் பிரச்னை. ஆனா, அதை தான் நாம உற்று  நோக்கவும், தீீீர்க்கவும் வேண்டிய பிரதான பிரச்னையா இருக்கனும்னு நான் நினைக்கிறேன். 

பாகிஸ்தானுக்கு நான் ஏன்டா போகனும் வெண்ணை மவனேனு கேட்குறதுலாம் முக்கியமானது தான். ஆனா அதைவிட முக்கியமானது, இப்போ நான் என்ன சொல்லிட்டனு நீ என்னைய பாகிஸ்தானுக்கு போக சொல்டறங்குறது. ? கேள்வி கேட்க கூடாது, தேவையை சொல்லக்கூடாது, உரிமையை வேணுங்க கூடாது. இதலாம் சொல்லிட்டா நாம நாடு கடத்தப்படனும். 

ஒண்ணு புரிஞ்சுக்கனும், அவனால நம்ம இங்கயிருந்து எங்கயும் கிளப்ப முடியாதுங்குறது நமக்கு நல்லாவே தெரியும், அப்பறம் ஏன் அதுக்கு போய் முண்டிட்டு கிடக்கனும். அவனுக்கு மக்களோட உரிமையை , தேவையை நிறைவேத்த முடியலனா அவன் வேணா இங்கிருந்து கிளம்பிக்கட்டும். நாம அந்த பொண்ணு பக்கம் நின்னு இன்னும் சத்தமா அதை கேட்போம், சொல்லுவோம். அவ்ளோதான்.. 

திரும்பி போகவும் கணவாய் இருக்கு தானே. அப்பறம் என்ன ?   

மேல அந்த அதிகாரி சொன்ன எல்லாமே அரசு கவனத்துல எடுத்து நிறைவேத்த வேண்டிய ஒண்ணுதான். அதை தமிழ்நாடு அரசு முழுசாவும், ஒரு சில மாநிலங்கள் அதில் சிலதையும் மக்களுக்கான திட்டமா செயல்படுத்திட்டு தான் இருக்கு. 

மக்களோட அடிப்படை தேவையையும், உரிமையையும் கவனிக்காத அரசும், அதோட அதிகாரிகளும் அப்படி என்னத்தை கிழிச்சு ஆற வைக்க போறாய்ங்க !?

Friday, September 23, 2022

துறைமுகங்கள் வரைவு மசோதா திருத்தம் - 2022

இந்த மசோதாவை தமிழ்நாடு உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் அனைத்தும் எதிர்க்கின்றன. காரணம், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு, இடைநிலை துறைமுகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் என்பதால். மாநில அதிகாரங்கள் என்பதை தாண்டி குஜராத் , கோவா , மகாராஷ்டிரா போன்ற ஆளும் ஒன்றிய அரசின் கட்சிகளின் மாநில அரசே எதிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.


 அது பொருளாதார வருவாய். இந்தியாவில் 212 சிறு மற்றும் 12 பெரும் துறைமுகங்கள் உள்ளன.(According to ministry of ports,shipping and waterways) இவற்றில் உள்ள பெரும் துறைமுகங்கள் ஒன்றிய பட்டியலில் உள்ளன. மீதமுள்ளவை மாநில பட்டியலில் உள்ளன. 12 பெரும் துறைமுகங்களில் 3 தமிழ்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு துறைமுகங்களில் குஜராத்தும், மகாராஷ்டிராவும் தலா 48 துறைமுகங்களை கொண்டுள்ளன. இவை தான் ஆளும் கட்சியாக இருந்தாலும் அவை எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம். குஜராத் அரசால் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் போக காரணம், நாட்டின் சிறு துறைமுகங்களில் வரும் மொத்த வருவாயில் 70% குஜராத் மட்டுமே ஈட்டுவது தான். பெரும் துறைமுகங்களில் வரும் வருவாயை விட சிறு துறைமுகங்கள் மூலமாக வரும் வருவாய் அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை தருகின்றன. பத்து, பத்து ரூபாயா பத்து பேர்ட்ட வாங்குறதுக்கும் நூறு ரூபாயா ஒருத்தர்ட்ட வாங்குறதுக்கும் உள்ள வேறுபாடு தான் சிறு,பெரும் துறைமுகங்களோட வேறுபாடு. பெரும் துறைமுகங்கள் 2020-2021ல் 672.68 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு பரிமாற்றங்கள் செய்துள்ளது. சிறு,இடைநிலை துறைமுகங்கள் 577.30 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு பரிமாற்றம் செய்திருக்கின்றன. இரண்டுத்துக்கும் 95 மில்லியன் டன் தான் வேறுபாடு. இதுல Passenger,Containers வேற தனியா இருக்கு. 


2020-21ல மொத்த சிறு,இடைநிலை துறைமுக அளவான 577.30ல, குஜராத் மட்டும் 387.57 மில்லியன் டன் பரிமாற்றம் பண்ணிருக்கு. தமிழ்நாடு வெறும் 7.41 மில்லியன் டன் மட்டும் தான். அதுல காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் 7.05 மில்லியன் டன், மீதமுள்ள 14 துறைமுகங்களோட கூடுதல் தான் 0.36 மில்லியன் டன். குஜராத்தையோ , மற்ற மாநிலங்களையோ ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் துறைமுகங்கள் மூலமாக வரும் வருவாய் என்பது மிகச்சொற்பம் தான். எனினும் தமிழ்நாடு அரசு மிகத்தீவிரமாக இந்த மசோதாவை எதிர்ப்பதற்கும் சில காரணங்கள் உண்டு. Maritime State Development Council(MSDC) எனும் கவுன்சில் 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மாநில அரசுகளின் கைகளில் இருந்த துறைமுக நடவடிக்கைகளில் மேற்பார்வையிடவும், ஆலோசனைகள் வழங்கவும் உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள். ஆனால் அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசின் கைகளிலேயே இருந்தது. தற்போது வரவிருக்கும் திருத்த மசோதா இந்த கவுன்சிலை , ஆணையமாக மாற்ற வித்திடுகிறது. மேலும் ஆணையத்தின் நிர்வாகிகள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர்கள். இதனால் Msdc தற்போதிருக்கும் நிலையை இம்மசோதா தலைகீழாக மாற்றும். மாநில அரசு உறுப்பினராகவும், ஆலோசனையிலும் பங்கு பெறலாம் ஆனால் அதிகாரங்கள் முழுவதும் ஒன்றிய அரசின் கைக்கு சென்றுவிடும். மாநில பட்டியலில் உள்ள ஒரு துறையில் மாநிலங்களின் அதிகாரங்களை செயலிழக்க செய்து அதனை இம்மசோதா மூலம் முழுவதுமாக பெற எத்தனிக்கும் இந்த மசோதாவை தமிழ்நாடு அரசு ஏற்காததும், எதிர்ப்பதும் போல மற்ற மாநிலங்களும் இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதையும், மாநில அதிகாரங்களை பறிக்கும் செயல் என்பதையும், தனியார்மயமாக்கலின் விபரீதங்களையும் உணர்ந்து எப்போது செயல்பட போகின்றன என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Saturday, September 10, 2022

மின்கட்டண உயர்வில் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு

தமிழ்நாட்டில் 1989ல் இருந்து விவசாயத்துக்கு முழுமையாகவும், 2016ல் இருந்து அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரமும் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக குறைந்த விலையிலேயே மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார மசோதாவில் கூட அதிக சுமையை மக்கள் மீது சுமத்துவதற்கான ஏகபோக நடைமுறைகளும் , சிக்கல்களும் இருந்ததால் தான் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அந்த மசோதாவிற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கூட பங்கீட்டில் வரும் மின்சாரத்திற்கும் , உற்பத்தி காரணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான சூழல் அமைந்ததால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுயிருக்கிறார் .

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வு குறித்து பேச கடைசியாக கிடைத்தது டெல்லியாக தான் இருக்கும். ஆனால் 
டெல்லியுடன் ஒப்பிடும் அவசியம் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக இல்லை. காரணம் டெல்லியில் மின்சார வாரியம் தனியார் வசம் சென்று இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தர்க்கத்திற்காக பார்த்தோமேயானால்,டெல்லியில் 7 தனியார் நிறுவனங்கள் மின் விநியோகம் செய்து வருகின்றன. இவை அனைத்தின் சராசரி குறைந்தபட்ச மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ஏறத்தாள 6 ரூபாய். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் குறைந்தபட்ச சராசரி. ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியில்லை. இங்கு குறைந்தபட்ச மின் கட்டணம் 1.75 ரூபாய் மட்டுமே. இது வேறெந்த மாநிலத்தையும் விட குறைந்த விலையாகும். தற்போது விலையுயர்த்தப்பட்டதன் குறைந்தபட்ச கட்டணம் கூட 2.25 ரூபாய் தான். இதுவும் கூட எந்தவொரு மாநிலமும் நிர்ணயிக்காத குறைந்த கட்டண விலை தான். இருந்தும் ஊடகங்களில் வருவது போன்றும், வாட்ஸ் அப் வரலாற்று ஆய்வுகள் கண்ணை மூடிக்கொண்டு Forward செய்வது போலவும் பெரும் மலையாக மின் கட்டண உயர்வை பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது ??. 

மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. உண்மைதான். மொத்தமாக உயர்த்தப்பட்ட கட்டண விவரத்தை யூனிட்டுக்கான விலையாக மக்களிடம் முன்னெடுத்து வைக்காதது மட்டுமே இதற்கு காரணம். 100 யூனிட் வரை தமிழ்நாடு அரசு மின்சார மானியம் வழங்கி வருகிறது. இதேபோல் 101-200 வரையுள்ள 100 யூனிட் மின்சாரத்திற்கும் அரசு மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..

தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்று வரை 4 நடைமுறைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் அவை 2 வகைகளாக மாற்றப்பட்டுள்ளது.
முந்தையதின் முதல் நடைமுறையில் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம். 
இரண்டாவது நடைமுறையில் 101-200 வரை யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாயும், சேவை கட்டணமாக 30 ரூபாயுமாகும். இதில் மானியமாக யூனிட்டுக்கு 1 ரூபாயும் , சேவை கட்டணத்தில் 10 ரூபாயும் வழங்கப்பட்டது. எனில் யூனிட் ஒன்று 1.50 ரூபாய் மட்டுமே.
மூன்றாவது நடைமுறையில் 201- 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாயும், சேவை கட்டணமாக 40 ரூபாயாகவும் இருந்தது. மானியமாக சேவை கட்டணத்தில் 10 ரூபாய் வழங்கப்பட்டது.
நான்காவது நடைமுறையில் 501- aboveல் மூன்று பிரிவுகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் சராசரி 4.9 ரூபாய். சேவை கட்டணம் 50 ரூபாய். இதில் மானியம் ஏதுமில்லை. 

தற்போதைய மாற்ற நடைமுறைப்படி 2 பிரிவே, அவை 101- 500 , 501- above. சேவை கட்டணம் குறித்த தகவல் ஏதுமில்லை. 

இதில் முதல் நடைமுறையான 101-500ல் , முதல் 100 யூனிட்டுக்கு கட்டணமில்லை. 101- 200 வரை யூனிட்டுக்கு 4.50 ரூபாய், அரசு மானியமாக 2.25 ரூபாய் வழங்குகிறது. 
201- 400 வரை 4.50 ரூபாய்.
401- 500 வரை 6 ரூபாய்.
501- aboveல் 6 பிரிவுகளில் உள்ள கட்டண சராசரியாக 8 ரூபாய் உள்ளது.

கட்டண உயர்வு எவ்வளவென்று பார்த்தோமானால்,

101- 200 வரை - 75 பைசா
201- 400 வரை - 1.50 ரூபாய்
401- 500 வரை - 3 ரூபாய்
501 - aboveல் - 3.10 ரூபாய்
[குறிப்பிட்டவை அனைத்தும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் மட்டுமே]

தற்போதைய சூழல் மற்றும் காரணங்களால் மின்கட்டண உயர்வு தவிர்க்கப்பட முடியாதது தான். வேறெந்த மாநிலமும் மக்களுக்கு வழங்காத/வழங்கமுடியாத குறைந்த விலையில் தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எனினும் அதனை சுமப்பது சாமானிய மக்களுக்கு சிரமமானது தான்.  அதற்காக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் இடத்தில் தமிழ்நாடு இல்லை. தமிழ்நாட்டுடன் ஒப்பிட வேண்டுமெனில் கட்டணத்தை அரசு சில மடங்குகள் உயர்த்தினால் மட்டுமே முடியும். சமூக ஊடகங்களிலும்/ஊடகங்களிலும் பரவும் அதீத கட்டண விதிப்பு என்ற மாயையை உடைத்து, உண்மையை வெளிச்சமிட்டு மக்களிடம் காட்ட வேண்டியதை சரிவர செய்யாத தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கை கட்டாயம் கண்டிக்கலாம்.





பப் சமூகத்தின் மையப்புள்ளி

சமூகத்தில் பரவலாக உள்ள உணவு வகைகளை தவிர்த்து விட்டு அது சார்ந்த சூழலை சந்திக்க வேண்டும் என்பது முழுவதுமாக ஜனநாயகத்திற்கு எதிரானது. விருப்பம் இல்லாவிட்டால் அவற்றை பயன்படுத்தாமல் இருந்துவிட வேண்டிதானே ! குடியா மூழ்கி போய்விடும். பீஃப் இல்லாத உணவுத்திருவிழாவை போன்றதொரு சுயவிருப்ப நிலை தான் மது இல்லாத பப். இந்த குறும் சுயவிருப்ப நிலைகள் பொது சமூகத்தில் நிகழ்ந்த/நிகழும்/நிகழப்போகும் வெறுப்பு நிலைகளின் நிழல்கள் தான். 


மது இல்லாததொரு பப் என்பது எங்களின் விருப்பம்னுலாம் சொல்ல முடியாது. பப்ங்குறது குடிக்கவும் , அரட்டை அடிக்கவும் உருவானது தான்.


அப்படி உங்க விருப்பமா அது இருந்தா அதை ஏன் பொது சமூக கட்டமைப்பில் உள்ள ஒரு இடத்துக்குள்ள கொண்டு வரனும் ? பப் என்பது சமூகத்தின் மையப்புள்ளி. பொதுவாக மேலை நாட்டு கலாச்சாரம் தான் என்றாலும், அது சமூக கட்டமைப்பில் இருக்கும் இடம் ரொம்ப Sensitiveவானது. அங்க தப்பு நடக்கலனு சொல்ல வரல, எங்கதான் தப்பு நடக்கலனு தான் கேட்குறன் ? தப்பு நடந்தா சட்டப்படி தண்டிச்சு விட வேண்டி தான் அதுல எந்த மாற்று கருத்தும் இல்ல.


19ம் நூற்றாண்டுல உலக நாடுகள்ல பரவலாக இருந்த ஒரு பொழுதுபோக்கும் இடம் தான் பப். வாரஇறுதி நாட்களில் பொதுவான ஓர் இடத்தில் மக்கள் கூடி தங்களின் ஓய்வு நேரத்தை செலவிட்டனர். இதை கிட்டத்தட்ட (Common Home)  சத்திரம்னு சொல்லிக்கிட்டாங்க. யார் வேண்டுமானலும் வரலாம், போகலாம், மது அருந்தலாம், கூடி பேசலாம், அரட்டை அடிக்கலாம் . இதுதான் பின்னால பப்'ங்குற (Public home - Pub) கலாச்சாரமா உருவெடுக்க காரணமா இருந்தது. முதல்ல செல்வ வளமிக்கோர் வந்து ஓய்வு நேரங்களை கழிக்கும் பொழுதுபோக்கு கட்டடங்களாக இருந்த பப்கள், தொழில்துறை வளர்ச்சிக்கு பின்னர், கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்தவர்கள் கூடி பேசவும், பொழுதை கழிக்கவும் வாரமொருமுறை சந்திக்குற டீ கடை Spotஅ மாறுனுச்சு(மது தான் பிரதானம், மது மட்டும் தான் பிரதானம்). பொது சமூக கட்டமைப்பில் இயங்குற நிகழ்வோ, தொழிலோ அது சார்ந்த தொழில்முறை வளர்ச்சியை அடையுறப்போ, அது அடுத்த கட்டத்தையும், புதுமையையும் நோக்கி நகரும். நகர்ந்து தான் ஆகனும். அப்படி தான் பப் அதோட புதுமைகளையும் புதுவித கலாச்சாரத்தையும் நோக்கி நகர்ந்தது. மது குடிப்பதற்கும் Meet பண்ணி Fun பண்ட்றதுக்கு மட்டுமே உருவான பப்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பிம்பத்தை கலை,அழகு சார்ந்த பொழுதுபோக்குகள் , அரசியல், தொழில்முனைவு ஆலோசனை கூடங்களாகவும், பல்வேறு தரப்பட்ட மக்கள் சந்திச்சு அவர்களோட எண்ணங்களை பிரதிபலிக்கவும் அப்படி பிரதிபலிக்கப்பட்டவையை ஏற்கவும், அப்படி இல்லை என மறுதலிக்கப்பட்டு உதறி தள்ளவும் 
இருந்த பொது சமூகத்திற்கான களமாகவும் மாறின பப்கள். கிராமங்கள்ல கூடுற தின்னை, வேப்பமர நிழல், டீ கடை படித்துறை , பம்படி, கோயில் குட்டிச்சுவரு மாதிரி நகரங்களில் உள்ள தியேட்டர், Mall, பார்க், சந்தை,இங்கயும் டீ கடை பிரதானம், கண்காட்சிகள் போன்றதொரு இடம் தான் பப்'பும்..., 


பப்களை, நாம் தியேட்டருக்கு போய் படம் பாக்குற மாதிரியான இடமாக வச்சிருக்கு ஒரு கூட்டம். நான் வாரத்துக்கு 2 படத்துக்கு போவன், நீங்க 7 படத்துக்கு கூட போகலாம் அது உங்க விருப்பம் , வசதி சார்ந்தது. அதுபோல தான் இப்போ பப்'பும். சமூக நீரோட்டத்தில் வளர்ந்து வரும் நவீன கலாச்சாரங்களை புறந்தள்ளுவதும் , அவற்றை குறுகிய வட்டத்திற்குள் அடைப்பதென்பதும் நாகரீக,சமூக வளர்ச்சிக்கான ஓர் SpeedBreaker தான். 


வடை தின்னா கொலஸ்ட்ரால் குறைய மாட்டுது, அதுனால வடை இல்லாத டீ கடைக்கு வண்டிய உட்றானு சொல்ட்றதும், அதுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குற குரூப்பு ஆமாப்பா சொல்ட்றதும் நடக்கத்தான் செய்யும். ஏன் அந்த டீ கடையோட வருமானம் கூட நல்லா இருக்கலாம். ஆனா ஒண்ணு புரிஞ்சுக்கனும் டீ கடைகள், வெறும் கடை மட்டும் இல்லங்க. அது பொதுச்சமூகம் சந்திக்குற ஒரு களம். அந்தக்களம் தான் மனுசங்களை பொதுசமூகத்திற்கு ஏற்ற மாதிரியான, எல்லா உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கூடியதாகவும், Atleast புரிஞ்சிக்குற மனநிலைக்கும் தயார்படுத்தி வந்திருக்கு.

வடை இல்லாத டீ கடை குறுகிய வட்டம்ங்க, அங்க வர கொஞ்ச பேரால புதியதொரு தொழில்முனைவுக்கான வளர்ச்சி இருக்கலாம், சமூக வளர்ச்சிக்கு வித்திடாது. எல்லாம் இப்படி யோசிச்சா தொழில் பண்ட்றாய்ங்க இப்ப மட்டும் தூக்கினு வந்துட்டனு கேட்கலாம், என்ன பண்ட்றது இப்படி விளக்குற அளவுக்கு எனக்கு இப்போதான அறிவு வந்திருக்கு. வேணும்னா முட்டைய சைவத்துல சேர்த்த மாதிரி பப்'புக்கு பதில் டூப்'னு வச்சுக்கோங்க. அந்தப் பேர் ஒரு கட்டமைப்பை வச்சிருக்கு. அதை உடைச்சிட கூடாது அவ்ளோதான். 


(பி.கு : ஆங் அப்பறம் இன்னொன்னு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு)