Friday, September 23, 2022

துறைமுகங்கள் வரைவு மசோதா திருத்தம் - 2022

இந்த மசோதாவை தமிழ்நாடு உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் அனைத்தும் எதிர்க்கின்றன. காரணம், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு, இடைநிலை துறைமுகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் என்பதால். மாநில அதிகாரங்கள் என்பதை தாண்டி குஜராத் , கோவா , மகாராஷ்டிரா போன்ற ஆளும் ஒன்றிய அரசின் கட்சிகளின் மாநில அரசே எதிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.


 அது பொருளாதார வருவாய். இந்தியாவில் 212 சிறு மற்றும் 12 பெரும் துறைமுகங்கள் உள்ளன.(According to ministry of ports,shipping and waterways) இவற்றில் உள்ள பெரும் துறைமுகங்கள் ஒன்றிய பட்டியலில் உள்ளன. மீதமுள்ளவை மாநில பட்டியலில் உள்ளன. 12 பெரும் துறைமுகங்களில் 3 தமிழ்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு துறைமுகங்களில் குஜராத்தும், மகாராஷ்டிராவும் தலா 48 துறைமுகங்களை கொண்டுள்ளன. இவை தான் ஆளும் கட்சியாக இருந்தாலும் அவை எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம். குஜராத் அரசால் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் போக காரணம், நாட்டின் சிறு துறைமுகங்களில் வரும் மொத்த வருவாயில் 70% குஜராத் மட்டுமே ஈட்டுவது தான். பெரும் துறைமுகங்களில் வரும் வருவாயை விட சிறு துறைமுகங்கள் மூலமாக வரும் வருவாய் அந்தந்த மாநிலங்களின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை தருகின்றன. பத்து, பத்து ரூபாயா பத்து பேர்ட்ட வாங்குறதுக்கும் நூறு ரூபாயா ஒருத்தர்ட்ட வாங்குறதுக்கும் உள்ள வேறுபாடு தான் சிறு,பெரும் துறைமுகங்களோட வேறுபாடு. பெரும் துறைமுகங்கள் 2020-2021ல் 672.68 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு பரிமாற்றங்கள் செய்துள்ளது. சிறு,இடைநிலை துறைமுகங்கள் 577.30 மில்லியன் டன் அளவுக்கு சரக்கு பரிமாற்றம் செய்திருக்கின்றன. இரண்டுத்துக்கும் 95 மில்லியன் டன் தான் வேறுபாடு. இதுல Passenger,Containers வேற தனியா இருக்கு. 


2020-21ல மொத்த சிறு,இடைநிலை துறைமுக அளவான 577.30ல, குஜராத் மட்டும் 387.57 மில்லியன் டன் பரிமாற்றம் பண்ணிருக்கு. தமிழ்நாடு வெறும் 7.41 மில்லியன் டன் மட்டும் தான். அதுல காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் 7.05 மில்லியன் டன், மீதமுள்ள 14 துறைமுகங்களோட கூடுதல் தான் 0.36 மில்லியன் டன். குஜராத்தையோ , மற்ற மாநிலங்களையோ ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் துறைமுகங்கள் மூலமாக வரும் வருவாய் என்பது மிகச்சொற்பம் தான். எனினும் தமிழ்நாடு அரசு மிகத்தீவிரமாக இந்த மசோதாவை எதிர்ப்பதற்கும் சில காரணங்கள் உண்டு. Maritime State Development Council(MSDC) எனும் கவுன்சில் 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மாநில அரசுகளின் கைகளில் இருந்த துறைமுக நடவடிக்கைகளில் மேற்பார்வையிடவும், ஆலோசனைகள் வழங்கவும் உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள். ஆனால் அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசின் கைகளிலேயே இருந்தது. தற்போது வரவிருக்கும் திருத்த மசோதா இந்த கவுன்சிலை , ஆணையமாக மாற்ற வித்திடுகிறது. மேலும் ஆணையத்தின் நிர்வாகிகள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர்கள். இதனால் Msdc தற்போதிருக்கும் நிலையை இம்மசோதா தலைகீழாக மாற்றும். மாநில அரசு உறுப்பினராகவும், ஆலோசனையிலும் பங்கு பெறலாம் ஆனால் அதிகாரங்கள் முழுவதும் ஒன்றிய அரசின் கைக்கு சென்றுவிடும். மாநில பட்டியலில் உள்ள ஒரு துறையில் மாநிலங்களின் அதிகாரங்களை செயலிழக்க செய்து அதனை இம்மசோதா மூலம் முழுவதுமாக பெற எத்தனிக்கும் இந்த மசோதாவை தமிழ்நாடு அரசு ஏற்காததும், எதிர்ப்பதும் போல மற்ற மாநிலங்களும் இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதையும், மாநில அதிகாரங்களை பறிக்கும் செயல் என்பதையும், தனியார்மயமாக்கலின் விபரீதங்களையும் உணர்ந்து எப்போது செயல்பட போகின்றன என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment