மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வு குறித்து பேச கடைசியாக கிடைத்தது டெல்லியாக தான் இருக்கும். ஆனால்
டெல்லியுடன் ஒப்பிடும் அவசியம் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக இல்லை. காரணம் டெல்லியில் மின்சார வாரியம் தனியார் வசம் சென்று இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தர்க்கத்திற்காக பார்த்தோமேயானால்,டெல்லியில் 7 தனியார் நிறுவனங்கள் மின் விநியோகம் செய்து வருகின்றன. இவை அனைத்தின் சராசரி குறைந்தபட்ச மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ஏறத்தாள 6 ரூபாய். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் குறைந்தபட்ச சராசரி. ஆனால் தமிழ்நாட்டின் நிலை அப்படியில்லை. இங்கு குறைந்தபட்ச மின் கட்டணம் 1.75 ரூபாய் மட்டுமே. இது வேறெந்த மாநிலத்தையும் விட குறைந்த விலையாகும். தற்போது விலையுயர்த்தப்பட்டதன் குறைந்தபட்ச கட்டணம் கூட 2.25 ரூபாய் தான். இதுவும் கூட எந்தவொரு மாநிலமும் நிர்ணயிக்காத குறைந்த கட்டண விலை தான். இருந்தும் ஊடகங்களில் வருவது போன்றும், வாட்ஸ் அப் வரலாற்று ஆய்வுகள் கண்ணை மூடிக்கொண்டு Forward செய்வது போலவும் பெரும் மலையாக மின் கட்டண உயர்வை பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது ??.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. உண்மைதான். மொத்தமாக உயர்த்தப்பட்ட கட்டண விவரத்தை யூனிட்டுக்கான விலையாக மக்களிடம் முன்னெடுத்து வைக்காதது மட்டுமே இதற்கு காரணம். 100 யூனிட் வரை தமிழ்நாடு அரசு மின்சார மானியம் வழங்கி வருகிறது. இதேபோல் 101-200 வரையுள்ள 100 யூனிட் மின்சாரத்திற்கும் அரசு மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..
தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்று வரை 4 நடைமுறைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் அவை 2 வகைகளாக மாற்றப்பட்டுள்ளது.
முந்தையதின் முதல் நடைமுறையில் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்.
இரண்டாவது நடைமுறையில் 101-200 வரை யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாயும், சேவை கட்டணமாக 30 ரூபாயுமாகும். இதில் மானியமாக யூனிட்டுக்கு 1 ரூபாயும் , சேவை கட்டணத்தில் 10 ரூபாயும் வழங்கப்பட்டது. எனில் யூனிட் ஒன்று 1.50 ரூபாய் மட்டுமே.
மூன்றாவது நடைமுறையில் 201- 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாயும், சேவை கட்டணமாக 40 ரூபாயாகவும் இருந்தது. மானியமாக சேவை கட்டணத்தில் 10 ரூபாய் வழங்கப்பட்டது.
நான்காவது நடைமுறையில் 501- aboveல் மூன்று பிரிவுகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் சராசரி 4.9 ரூபாய். சேவை கட்டணம் 50 ரூபாய். இதில் மானியம் ஏதுமில்லை.
தற்போதைய மாற்ற நடைமுறைப்படி 2 பிரிவே, அவை 101- 500 , 501- above. சேவை கட்டணம் குறித்த தகவல் ஏதுமில்லை.
இதில் முதல் நடைமுறையான 101-500ல் , முதல் 100 யூனிட்டுக்கு கட்டணமில்லை. 101- 200 வரை யூனிட்டுக்கு 4.50 ரூபாய், அரசு மானியமாக 2.25 ரூபாய் வழங்குகிறது.
201- 400 வரை 4.50 ரூபாய்.
401- 500 வரை 6 ரூபாய்.
501- aboveல் 6 பிரிவுகளில் உள்ள கட்டண சராசரியாக 8 ரூபாய் உள்ளது.
கட்டண உயர்வு எவ்வளவென்று பார்த்தோமானால்,
101- 200 வரை - 75 பைசா
201- 400 வரை - 1.50 ரூபாய்
401- 500 வரை - 3 ரூபாய்
501 - aboveல் - 3.10 ரூபாய்
[குறிப்பிட்டவை அனைத்தும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் மட்டுமே]
தற்போதைய சூழல் மற்றும் காரணங்களால் மின்கட்டண உயர்வு தவிர்க்கப்பட முடியாதது தான். வேறெந்த மாநிலமும் மக்களுக்கு வழங்காத/வழங்கமுடியாத குறைந்த விலையில் தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எனினும் அதனை சுமப்பது சாமானிய மக்களுக்கு சிரமமானது தான். அதற்காக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் இடத்தில் தமிழ்நாடு இல்லை. தமிழ்நாட்டுடன் ஒப்பிட வேண்டுமெனில் கட்டணத்தை அரசு சில மடங்குகள் உயர்த்தினால் மட்டுமே முடியும். சமூக ஊடகங்களிலும்/ஊடகங்களிலும் பரவும் அதீத கட்டண விதிப்பு என்ற மாயையை உடைத்து, உண்மையை வெளிச்சமிட்டு மக்களிடம் காட்ட வேண்டியதை சரிவர செய்யாத தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கை கட்டாயம் கண்டிக்கலாம்.
No comments:
Post a Comment