Friday, September 29, 2023

அதிகார பரவலாக்கம் பெண்களுக்குமானது !

தமிழ்நாட்டில் பெண்களுக்கான சொத்துரிமை, இடஒதுக்கீடு என சமஉரிமை அளிப்பதில் உள்ள தீர்க்கம், கட்சிக்குள்ளான அரசியல் அதிகாரம் அளிப்பதில் தொய்வாகவே உள்ளது. 

50% இடஒதுக்கீட்டை உள்ளாட்சியில் வழங்கினாலும், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என எண்ணிக்கையில்  ஓரளவிற்காவது சாத்தியப்படுத்தும் அளவிற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும்,  கட்சி ரீதியாக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இன்றளவும் உள்ளன. பெண்களை கோயில் கருவறைக்குள் செல்வதை சாத்தியப்படுத்திய  நம்மால் அதிகார பொறுப்புகளில் அவர்களை அமர்த்துவதில் சறுக்கலை சந்திக்கிறோம்.

அமைச்சரை விட மாவட்டத்திற்குள் வலுவான அதிகாரத்தை கொண்டிருக்கும் மாவட்ட செயலாளர்களில் பெண்களை நியமிப்பதில் மன ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. வேட்டியை மடிச்சு கட்டி மல்லுக்க நிற்குற காலத்துலயே தங்கிட்டோமோங்குற எண்ணம் இயல்பாவே தொத்திக்குது. ஒருவேளை அப்படியே இருந்தாலுமே "சேலையை ஏத்தி சொருகி" போடா பொடலங்கானு சொல்ல முடியாத நிலையில பெண்கள் ஒண்ணும் இன்னைக்கு இல்ல.

கட்சிக்காக களத்துல இறங்கி வேலை செய்யுறதுல ஆண்களோட ஆதிக்கமோ/பங்களிப்போ அதிகமா இருக்குறதால பெண்களை நியமிக்குறதுல நடைமுறை சிக்கல்கள் இருக்கு. இதுல முதன்மையா இருக்குற 4 பிரச்னைகளா எதை பாக்கலாம்னா :  1) ஆண்களுக்கு இருக்குற ஆதிக்க மனப்பாங்கு. பெரும்பாலும் கட்சி கள நடவடிக்கையில ஆண் இருக்குறப்போ பெண்ட்ட போய் நின்னு பேசுறதுக்கு இருக்குற மனக்குறைபாடு.(பொதுப்புத்தியில மண்டிக்கிடக்குற அழுக்கு அது, பெண் விடுதலை பேசுற கட்சில இருக்குறவங்க எல்லாரும் அதை தீர்க்கமா பின்பற்றுவாங்கனு எதிர்பார்க்க முடியாது. ) 2) பெண்களோட பொருளாதார சுதந்திரம் 3) போராட்டம், அதனால சிறைக்கு போகக் கூடிய சூழல்ல பெண்கள் அதை எப்படி சமாளிப்பாங்க, அவங்க சமாளிச்சாலும் அதனால கட்சிக்கு ஏற்படுற சிக்கல்களை, கட்சி எப்படி சமாளிக்கும்ங்குற யோசனை? 4) தேர்தல் அரசியல் இல்லாம இயக்க அரசியல்ல களமாடுறதுல பெண்கள் ஈடுபடுறதுல உள்ள தயக்கம்/ ஓரங்கட்டப்படுற நிலைமை. இது 4ம் என்னோட பார்வையில இருந்து முதன்மையான காரணமா இருக்கு.

இது 4த்துல பெண்கள் தங்களை தாங்களே வலுப்படுத்திக்க வேண்டிய இடம் பொருளாதார சுதந்திரம். அதிகாரத்தை அடைய அதை அவங்க சாத்தியப்படுத்திப்பாங்க. மீதி எல்லாத்துலயும் சமூக மாற்றங்கள் தேவை. ஆனா அதிகாரத்தை வழங்குனப்பறம் தான் கட்சி ரீதியா அது நடக்க தொடங்கும்னு நம்புறன். அதிகார பொறுப்புகளை பெண்களுக்கு வழங்குற முடிவுல முதல்ல கட்சி தலைமை தயாராவும், திடமாவும் இருக்கனும். பொறுப்புகளை அடையப்போற பெண்களை விட  கட்சி தலைமைக்கு தான் இது மிக இக்கட்டான சூழல்களை உருவாக்கும்ங்குறதையும் ஏத்துக்க தான் வேணும்.

தேர்தல் அரசியல்ல பெண்களை முன்னாடி கொண்டு வரதுல இருக்கு அக்கறையை கூடுதலாக்க வேண்டியதும், கட்சி அரசியல்ல பெண்களை முன்னாடி கொண்டு வர தீவிரமான, திடமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியதும் அவசியம். பெண் மாவட்ட செயலாளர் என்பதை ஆட்சியில் இருக்கும்/இருந்த கட்சிகள் மேற்கொள்வது மற்ற கட்சிகளை விடவும் ரொம்ப சிரமமான காரியமாக தான் இருக்கும். விசிகவில் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் 10% பெண்களுக்கு என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த மே மாதம் அறிவிச்சது சிறப்பான முன்னெடுப்பு.


தமிழ்நாட்டை பொறுத்தவரை 1990களோட பிற்பகுதியிலேயே திமுகல முதல் பெண் மாவட்ட செயலாளராக வாசுகி முருகேசன் இருந்தாங்க. அவங்க தொடர்ந்து மூன்று முறை கரூர் மாவட்ட செயலாளாராக இருந்தாங்க. அதுக்கப்பறம் விழுப்புரம் மாவட்ட செயலாளரா இருந்த அங்கயர்கண்ணி, வேலூர் மாவட்ட செயலாளாரா இருந்த முத்தமிழ் செல்வி, கோவை மாவட்ட செயலாளரா இருந்த விஜயலெட்சுமி பழனிச்சாமி, இப்போ தூத்துக்குடி மாவட்ட செயலாளரா இருக்க அமைச்சர் கீதா ஜீவன்னு ஒரு சிலர் அந்த பொறுப்புகள்ல அமர்த்தப்பட்டாங்க. அதோட 2014ல 5 பெண் மாவட்ட செயலாளர்களை நியமிக்க கலைஞர் முடிவு எடுத்திருக்குறதா பேசப்பட்டுச்சு. கட்சியின் அதிகார பொறுப்புகள்ல பெண்களை கொண்டு வரதுல மற்ற யாரையும் விட கலைஞருக்கு அதிகமான சிந்தனை இருந்துச்சு. ஆனா அப்போ வந்த தேர்தல் முடிவுகள், சூழல், கட்சி நிர்வாகிகளுக்குள்ள இருந்த சலனங்களால அந்த முடிவுகள் கைவிடப்பட்டதாவும் கூறப்பட்டுச்சு. ஆட்சியிலும், கட்சியிலும் "பெண்" தலைமையை கொண்டு இயங்கிய கட்சியா அதிமுக இருந்தாலும், இப்போ தான் முதல் முறையா ஒரு பெண் மாவட்ட செயலாளரா நியமிக்கப்படுறாங்க.



எம்எல்ஏ,எம்பி,அமைச்சர் என ஆளுமை மிக்க பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும், மாவட்ட செயலாளர் போன்ற கட்சியின் அதிகாரமிக்க பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவதை இனிமேலாவது சாத்தியமாக்க கட்சிகள் துணிச்சலான முடிவுகளை எடுக்கனும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்னு பெரியார் சிந்தனையை சாத்தியமாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின், பெண்களுக்கு கட்சியில அதிகார பொறுப்புகளை வழங்கனும்னு நினைச்ச கலைஞரோட சிந்தைனையையும், திமுக தலைவர்ங்குற முறையில ஸ்டாலின் சாத்தியப்படுத்தனும். பெண் தலைமையை ஏற்று தமிழ்நாட்டையும், அதிமுகவையும் நீண்ட நாட்கள் ஆட்சி செய்த கட்சியோட இப்போதைய பொதுச்செயலாளராக இருக்குற எடப்பாடி பழனிச்சாமி இன்னும் அதிக பெண்களை அதிகார பொறுப்பில் அமர்த்த முயற்சிக்க வேண்டும். அதிகார பரவலாக்கம் என்பது பெண்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படுவது தான்.

Wednesday, September 13, 2023

கண்ணொளி கொடுத்த தமிழ்நாடு.

1950-70 காலகட்டத்துல இந்தியா முழுக்க பார்வை குறைபாடு உள்ளவர்களோட எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு. ஏறத்தாழ 20% பேருக்கு இருந்ததா அரசு அறிக்கைகள் சொல்லுது. விட்டமின் A குறைபாடுனால ஏற்பட்ட மாலைக்கண் நோய் உள்ளிட்ட பார்வை குறைபாடு நோய்களை இனி வராம தடுக்க 1970கள்ல ஒன்றிய அரசு முன் முயற்சிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்குற வேலையில இருந்துச்சு. பிற்கால பிரச்னைகளுக்கு விட்டமின் Aவை அதிகரிக்க திட்டங்கள் கொண்டு வரப்பட முயற்சி செய்த இந்திய ஒன்றிய அரசால, ஏற்கனவே பார்வை குறைபாடு/இழப்பை சரிசெய்யுற திட்டங்களை செயல்படுத்த போதிய தெளிவோ, சூழலோ, அமைப்போ, தொலைநோக்கு பார்வையோ அமையாம போய்டுச்சு.

பார்வை குறைபாடு பிரச்னையினால, வறுமை ஒழிப்பு, இறப்பு விகித அதிகரிப்பு, உணவுப்பஞ்சம் போன்ற பிரச்னைகளை சரிசெய்யுறதுல அரசுக்கு தொய்வு ஏற்பட்டுச்சு. பார்வை குறைபாடு/பார்வை இழந்தவர்களால் வருமானம் ஈட்ட முடியாத சூழல் உருவானுச்சு. வேலை கிடைக்காது, அன்றாடம் வேலை செஞ்சா தான் சோறு கிடைக்கும்னு இருந்தவங்களுக்கு சோறு கிடைக்காது. பட்டினிச் சாவு அதிகமா இருந்த அந்த காலக்கட்டத்துல பார்வை குறைபாடு அதோட வீரியத்தை அதிகப்படுத்துச்சு. கனிசமான அளவுல உணவு உற்பத்தி சார்ந்த துறையில இருந்த ஏழை எளியோரால கண் பிரச்னைகளை சரிசெய்யுற அளவுக்கான வசதியும், வாய்ப்பும் இல்லாம போயிடுச்சு.

இந்தியா முழுக்க இருந்த இந்த மக்கள் பிரச்னையை தமிழ்நாடு மட்டும் அரசோட முதன்மை பிரச்னையா பார்த்துச்சு. இதுக்காக 1972ல மறைந்த முன்னாள் முதலமைச்சர் "கலைஞரால" கொண்டு வரப்பட்டது தான் "கண்ணொளி திட்டம்". 


இது மூலமா அரசு, தனியார் அமைப்புகளையும் சேர்த்து ஏழை எளியோருக்கு இழந்த பார்வையை திருப்பி கொடுக்க திட்டம் வகுத்துச்சு. தமிழ்நாட்டோட நான்கு முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்கள்ல கண் மருத்துவம் சார்ந்த குழுவினரை களத்துல இறக்குனுச்சு. மாவட்டம் வாரியா அனுப்பபட்டவங்க சில கிலோ மீட்டருக்கு ஒரு ஊர்னு எங்கவாது பெரிய பள்ளிக்கூடம், கோயில் இடம்னு Camp போடுவாங்க. அதுல பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரை, மருந்து(Eye drops), கண்ணாடி வழங்கப்பட்டுச்சு. கண் புரை உள்ளிட்ட நோய்களுக்கு அந்த 4 முதன்மை நகரங்கள்ல கண் அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுச்சு.

பார்வை ஒளியை மட்டுமில்ல அதனால அவங்களோட வாழ்க்கையிலயும் ஒளியை ஏத்தி வச்சாரு "கலைஞர்". இன்னைக்கு கண் புரை உள்ளிட்ட பார்வை குறைபாடுடையவர்கள் கம்மியா இருக்குறதும் தமிழ்நாட்ல தான். குறைபாடு உடையவர்களுக்கு அதிகப்படியான விலையில்லா அறுவை சிகிச்சை செய்யப்படுறதும் தமிழ்நாட்ல தான்.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர்னு நான்கு முக்கிய இடங்கள்ல கண் தொடர்பான விலையில்லா அறுவை சிகிச்சைகள் அரசு சார்பா இன்று வரை செய்யப்படுது. முதல் நிலை நகரங்கள்ல கிடைக்குற இந்த வசதி அடுத்தடுத்த நகரங்களுக்கும் சென்றடையனும்ங்குறது தான் எல்லோருடைய எண்ணமும்.

அதை நிறைவேத்துற விதமா இப்போ முதலமைச்சர் "ஸ்டாலின்", தமிழ்நாடு முழுக்க 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்கள்ல 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்க திட்டம் வகுத்திருக்காரு. அதுக்காக #மேக்சிவிஷன் எனும் நிறுவனத்தோடு ஒப்பந்தமும் செய்யப்பட்ருக்கு. இனிமே கண் சிகிச்சைகளுக்காக முக்கிய நகரங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நம்ம ஊர் பக்கத்துலயே எங்காவது ஒரு கண் சிகிச்சை மையம் இருக்கும். அங்கயே சிகிச்சை எடுத்துக்கலாம். 

திட்டம் தந்து கண்ணொளி கொடுத்த கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி.

Thursday, June 22, 2023

மணிப்பூர் வன்முறை

மணிப்பூரில் மெய்தெய், குகி மற்றும் நாகா இனக்குழுக்கள் அடுத்தடுத்த பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ளன.  மெய்தெய் இன மக்கள் பெரும்பாலும் இந்துக்களாகவும், நாகா மற்றும் குகி மக்கள் பெரும்பாலும் கிறிஸ்துவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.



நாகா மற்றும் குகி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மெய்தேயில் உள்ளவர்கள் SC, OBC, உயர்சாதியினருக்கான EWS மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்த சாதி இந்துக்களாக உள்ளனர். மணிப்பூரில் SC-2%, OBC-17%, ST-31%, உயர்சாதியினருக்கான EWS -10% இடஒதுக்கீடு முறை தற்போது அமலில் உள்ளது.

இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு முன் மெய்தெய் மக்கள் தாங்களும் பழங்குடியின வம்சாவழியை சேர்ந்தவர்கள் தான் என்றும், எனவே எங்களையும் பட்டியல் பழங்குடியின பிரிவில் இணைக்க வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் மெய்தெய் மக்களின் சில பிரிவினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைக்க பரிசீலிக்க வேண்டுமென அம்மாநில உயர்நீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர் வினையாக நடந்த போராட்டம் தான் வன்முறையாக மாறியது. மெய்தெய் மக்களை பழங்குடியின பட்டியலில் இணைத்தால் தங்களுக்கு உரிய இடஒதுக்கீட்டு உரிமைகளும், நிலஉரிமைகளும் பறிபோகும் என்ற அச்சத்தில் பழங்குடியினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தை எதிர்த்து மெய்தெயினரும் போராட வன்முறை மூண்டது.
((மெய்தெய் இனக்குழுவை பட்டியல் பழங்குடியில் இணைப்பதற்கும் அவர்களுக்குள்ளேயே இரு வேறுபட்ட கருத்துகள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.))

மெய்தெய் மக்கள் சமவெளி பகுதிகளில் இருந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும், அவர்கள் பழங்குடியினர் கலாச்சாரத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதாலும் அவர்களை பழங்குடியினர் என வகைப்படுத்த முடியாது. மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்தெய் இனக்குழுவை சேர்ந்தவர்கள் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். மேலும் பொருளாதாரம், அரசியல் அதிகாரம் என அனைத்திலும் மெய்தெய் மக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
ஆனால் அவர்களின் நிலப்பகுதி வெறும் 10 சதவீதம் தான் என்பதால் அதனை விரிவுபடுத்த நினைக்கின்றனர்.

மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களை மெய்தெய் மக்கள் உரிமை கொண்டாட முடியாது. எனவே பழங்குடியின பிரிவில் அவர்களை இணைத்து, குகி மக்களை வெளியேற்றும் படலத்தை தொடங்குவதன் மூலம் முக்கிய பகுதியான இம்பால் உள்ளிட்ட மலைப்பகுதி நிலங்களை தங்கள் வசம் ஆக்கிக்கொள்ளலாம் என்பது அங்குள்ள மதவாத கும்பலின் நோக்கம்.

இதனால் தான் 1950களுக்கு பிறகே குகி இன மக்கள் இந்திய ஒன்றியத்திற்குள் குடியேறினார்கள் என்றும், எனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தி அவர்களை இந்திய ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் மெய்தெய் மக்கள் வழியாக மதவாத கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது.

1970களில் அங்கு நடந்த ஆட்சி மாற்றம் இனக்குழுக்களை, மதக்குழுக்களாக மாற்றத் தொடங்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது மணிப்பூரில் அரங்கேறுவதும் இன வன்முறை இல்லை. அது இன போர்வைக்குள் நடந்தேறும் மத வன்முறை. இந்திய ஒன்றியத்தில் இணைந்த போது மெய்தெய் இனக்குழுவில் 100க்கும் மேற்பட்ட உட்குழுக்கள் இருந்துள்ளன. எல்லை பிரச்னை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் தங்களை அரசிடம் இருந்தும், ராணுவத்திடம் இருந்தும் தற்காத்து கொள்ள தங்களுக்கு மத அடையாளமிட்டு கொண்டனர். மதவாத சக்திகளும் தங்கள் சித்தாந்த பரப்புக்காக, அரசிடமும், அரசு இயந்திரத்திலும் உள்ள தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி தந்திர வலையிட்டனர்.

இனக்குழுக்கள், மத அடையாளங்களை தங்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த நினைத்தன. ஆனால் மதங்கள் இனக்குழுக்களை பாரபட்சமின்றி முதலில் மறைத்தும், பின் அழித்தும் தங்கள் பசிக்கு இறையாக்கி கொள்வன என்பதை அவர்களால் உணர முடியவில்லை. இனக்குழு என்ற சொல்லாடலை மதங்கள் இன்றும் உடன் வைத்துக்கொள்வதற்கான காரணம், அது மத துவேசங்களுக்கு தேவையான மற்றுமொரு கருவி. அவ்வளவே.

மெய்தெய் இனக்குழுவை பட்டியல் பழங்குடியில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டில் மறுவரையறையை மேற்கொள்வதற்கான குழு அமைக்கவும், இரு பிரிவினைரையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதின் மூலமாகவும் பிரச்னையையும், வன்முறையையும் தற்காலிக முடிவுக்காவது கொண்டு வரலாம், ஆனால்
அரசு அடுத்த வருடம் மே மாதம் வரை இது தொடர்பாக வாய் திறக்கப்போவதுமில்லை,  பிரச்னையை தீர்க்கப்போவதுமில்லை.

தற்போது வரை, வன்முறையால் நூற்றுக்கணக்கான உயிர்களும், வன்முறையை கலைக்க நடந்த துப்பாக்கி சூடு உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு 11க்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர்.


வன்முறைகள் எதையும் தீர்க்காது என்பதையும், அரசு அதன் மக்களான தங்களை காக்க தவறியதற்கான நுண் அரசியலையும் உணர்ந்து மக்களே தங்களை அமைதிப்படுத்தி கொள்ள பிரார்த்திப்பதை வேறு வழியில்லை

Wednesday, June 21, 2023

அவரு கலைஞர். அவ்ளோதான்.

கலைஞர் கோட்டம் வள்ளுவர் கோட்டம் போல் தான் உள்ளது !

ஆனால் வள்ளுவர் கோட்டத்தையே ஆழித்தேர் வடிவில் தான் அமைத்திருந்தார் கலைஞர்.

கன்னியாக்குமரில விவேகானந்தர் பாறை திறக்கப்பட்ட அடுத்த 7 மாசத்துல வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர்.

கன்னியாக்குமரியில விவேகானந்தர் பாறை உருவாக தொடங்கியது 1963 காங்கிரஸ் அரசு ஆட்சியில. விவேகானந்தரோட நூற்றாண்டை சிறப்பிக்க ஒன்றிய அரசு எடுத்த இந்த முடிவுக்கும், அதையும் தென்கோடியான குமரியில அமைக்குறதுக்கும் காங்கிரஸ்ல இருந்த சர்தார் படேலின் வழிதோன்றிய ஆர்எஸ்எஸ் அபிமானிகளும் ஒரு காரணம். அதுக்கு 1008 லாஜிக் காரணங்களும் சொல்லப்பட்டது.


1962ல தொடங்கி 1972 செப்டம்பர்ல "காங்கிரஸ்" ஆட்சியில ஆர்எஸ்எஸ்ஸோட ஏக்நாத் ரானடே மூலமா விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுச்சு. 1973 ஏப்ரல்ல சென்னைக் கோடம்பாக்கத்துல கலைஞர் தலைமையில வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1976ல கட்டிமுடிக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவுக்கு 7 நாள் முன்னாடி திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால அதை அப்போதைய குடியரசுத்தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது திறந்து வச்சாரு.

1973ல ஆரம்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்ட கட்டமைப்பை ஆழித்தேர் வடிவத்துல உருவாக்குறதுக்கு 3 வருசத்துக்கு முன்ன அதாவது 1970ல தான் இரண்டு தசாப்தமா ஓடாம கிடந்த ஆழித்தேரை ஓடவிட்டு சமத்துவ வடம் பிடிக்க வச்சாரு கலைஞர். இதே காலக்கட்டத்துல தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அறநிலையத்துறைக்கு தனி அமைச்சகம்லாம் அமைச்சாரு.

வள்ளுவர் கோட்டத்தை கட்டி அவரோடைய சிறப்புகளையும், புகழையும் எப்படி உலகறிய எடுத்து சொல்ல முடிஞ்சுதோ, அதேபோல இந்த பக்கத்துக்கு தேவையான ஆன்மீக வழி ஆயுதத்தையும் உருவாக்கி வச்சிருந்தாரு கலைஞர். ஆன்மிகத்தை கொண்டே அதன் மத துவேச அரசியலை வீழ்த்துறது தான் அதோட வேலை.


விவேகானந்தர் மண்டபத்துக்கு பக்கத்துலயே வள்ளுவர் சிலையை இந்திய ஒன்றியத்தோட தென்கோடி முனையில நிற்க வைக்க நினைச்சாரு கலைஞர். அதுக்காக தேசிய கட்சிகள் ஆண்டாண்டு காலமா ஆடிட்டு இருந்த ஆட்டத்தை அசால்ட்டா பீச்சாங்கையிலயே ஆடி ஜெயிச்சாரு கலைஞர். விவேகானந்தர் மண்டபத்தை கட்டுறதுக்கு  காரணமா இருந்த அதே ஆர்எஸ்எஸ் ரானடே மூலமாவே சிலை வைக்குற திட்டத்தை 1975ல அறிவிச்சாரு. இந்த திட்டத்துக்கு 1979ல "ஜனதா தள" ஆட்சியில மொரார்ஜி தேசாய் தலைமையில அடிக்கல் நாட்டப்பட்டுச்சு. ஆனா அதுக்கப்பறம் அது பல சிக்கல்களை சந்திச்சு 1990ல தொடங்கி 2000 ஜனவரி 1ல கட்டி முடிக்கப்பட்டு திறக்கவும்பட்டுச்சு.

வள்ளுவர் கோட்டம் - ஆழித்தேர் வடிவம் - வள்ளுவர் சிலை எல்லாமே ஆன்மீக வழி மத துவேச அரசியலுக்கு எதிரான கலைஞரோட ஆயுதங்கள் தான்.  அவரோட ஆயுதங்கள் எல்லாத்தையும் அவருடைய எதிரிகள் தான் தேர்ந்தெடுத்தாங்க.

The Real "அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது".

கலைஞரோட மக்கள் நலத்திட்டங்கள் மட்டும் இல்ல, அவர் எடுத்து வைக்குற ஒத்த செங்கல்லும் கூட வரலாற்றை எழுதுறதுக்கும், திருத்துறதுக்குமானதா தான் இருந்திருக்கு. அவரோட மிக எளிதான அத்தனை நகர்வுலையும் நாம நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அரசியல் நிலைப்பாடு இருந்திருக்கு. மூளை முழுக்க ஒருத்தரால எப்படி மக்கள், அவர்களோட அரசியல், பொருளாதாரம், உரிமைகள், நலன் பற்றியே சிந்திக்க முடிஞ்சுது ?  அவரை alpha maleனு தனியாலாம் அடையாளப்படுத்த வேணாம். alphaக்குலாம் alpha அவரு. So simply said அவரு கலைஞர். அவ்ளோதான்.

The only one super one raaaa அந்தாளு🖤.

Monday, June 5, 2023

NIRF ParameterSஐ விரிவுபடுத்த வேண்டும் !

கல்வி நிலையங்களை தரவரிசைப்படுத்துவதிலும் கூட Literacy rateக்கான வரையறையில் கையெழுத்து போடுவது என்ற காரணியை தொன்று தொட்டு வைத்திருப்பது போல NIRFம் அதே மாதிரியான பெட்ரோமேக்ஸ் லைட்களையே கணக்கில் கொண்டு செயல்படுகிறது.

இந்த பட்டியலை உதாசீனப்படுத்துவது நோக்கமல்ல. அதில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய வரையறைகள் நிறைய இருக்கின்றன. NIRF வைத்துள்ள Parametersஐ சற்று விரிவுபடுத்த வேண்டியதும், உளவியல் காரணங்களையும் அதில் உட்புகுத்த வேண்டுமென்பதிலும் கவனமும், கராரும் காட்ட வேண்டும். 

* ESCS(Economically and socially challenged students)ன் படி மாணவர்களை கணக்கிடுவதின் படியே ஆசிரியர்களின் அளவையும் அது உறுதிபடுத்த வேண்டும். (Economically என்பதில் சிக்கல் இருக்காது, Socially என்பதில் தீர்க்கம் வேண்டும்)

*பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்வது போல, இடைநிற்றல் மற்றும் கல்வியை முழுமையாக தொடர முடியாத மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தும் பட்டியல் உறுதி செய்யப்பட வேண்டும்.

*மாணவர்களின் கல்வி தரத்தை மட்டுமல்ல, கல்லூரியில் அடுத்த 3,4 அல்லது 5 வருடங்கள் அவர்கள் கல்வி பயில்வதற்கான உடல் மற்றும் உள ரீதியான சூழலையும் அது உருவாக்கி தந்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்தே பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

* கல்வி கற்கும் பெண்களின் அளவை parameterல் தனி அளவுருவாக வைத்திருப்பது போலவே திருநங்கை/திருநம்பிகளையும் parameter கொண்டிருக்க வேண்டும்.

இடைநிற்றலை காரணமாக முன் வைத்து இந்த பட்டியல் உறுதி செய்யப்பட்டால் பெரும்பாலான ஐஐடிகள் இந்த பட்டியலுக்குள் வர வாய்ப்பில்லை. கடந்த 2019ல் ThePrint ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியா முழுவதும் இருக்கும் ஐஐடிகளில் 2018&19ம் ஆண்டுகளில் 2400 மாணவர்கள் இடைநின்றுள்ளனர். அதிலும் அவர்கள் SC,ST,OBC மாணவர்கள் என கூறியிருந்தது. அதன் பிறகு இது போன்ற SURVEY வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(கட்டுரை - முதல் COMMENTல்)

Financial resources and their utilisationல் தன்னிரைவு அடைவதும் இந்த
NIRF பட்டியலில் இடம் பிடிப்பதற்கு முக்கியதொரு காரணியாக உள்ளது. என்றாலும் தமிழ்நாடு அரசின் ஒரு சில பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் தக்க வைத்துள்ள இடங்களை விட அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த நிதி தன்னிகர்வை அடைந்த தஞ்சாவூர் சாஸ்த்ரா சற்று கூடுதலாக தக்க வைத்துள்ளது கவனிக்க வேண்டியது. 

Parameterன் முக்கியமான காரணிகளையே புறங்கையால் handle செய்த பல்கலைக்கழங்கள்/ கல்லூரிகளை பட்டியலுக்குள் கொண்டு வந்ததே கவலை தரக்கூடிய ஒன்றாகவுள்ளது. மற்ற காரணிகளில் அவை தன்னிறைவை அடைந்திருக்கலாம். ஆனால் இரண்டு கையையும் சேர்த்து தட்டினால் தானே சத்தம் வரும்.

இதுபோன்ற பட்டியல்கள் யாருடைய வளர்ச்சியையும் ஒருபோதும் தடுத்து விடப்போவதில்லை என்றாலும், எங்களின் கையே எங்கள் கண்களின் பார்வையை பறிப்பதில் அத்துனை நியாயமில்லை.

Monday, April 17, 2023

பறிபோகும் அரசியல் அதிகார உரிமை

எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குறது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டும் இல்ல, எளியவர்களை அரசியலை விட்டு விலக்கி வைக்கும் தந்திரக்காரத்தனமும் தான்.

தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிக்குற மாற்று கட்சியை சேர்ந்தவங்களை பணம், அமைச்சர் பதவியை காட்டி தங்களோட கட்சியில சேர்க்குற நிகழ்வுகள்லாம் 2014க்கு அப்பறம் இந்திய ஒன்றியத்துல ரொம்பச் சாதரணமாகிட்டு.

இது ஜனநாயக மாண்புகளை குலைக்குற செயலா மட்டும் பார்க்க முடியாது. எம்எல்ஏக்களை விலைபேசி வாங்குற பிரதான கட்சிகளால, ஏனைய கட்சிகள் வேட்பாளர்களை களம் இறக்குறதுல நிறைய நெருக்கடிகளை சந்திச்சிட்டு வருது. 

ஜெயிச்சதுக்கு அப்பறம் கட்சி மாறாம இருக்கனும்னும், நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களாக இருக்கனுங்குறதுக்காகவும், கட்சியில் பாரம்பரியமாக இருந்து வரவங்களையும், வாரிசுகளையும் களம் இறக்க வேண்டிய கட்டாயச் சூழல்ல சிக்கியிருக்காங்க. அது மட்டுமில்லாம பணத்துக்காக மாற்று கட்சிக்கு போகாத அளவுக்கு பொருளாதாரத்துல வலுவா இருக்குறவங்களாவும் பார்த்து நிற்க வைக்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கு. இதனால கட்சிக்காரங்களாகவும், அடிமட்ட தொண்டர்களாகவும் இருக்குற எளியவர்களுக்கு அரசியல் அதிகாரம் எட்டாக்கனியா மாறுது.

ஏற்கனவே, அரசியல் அதிகாரம் கிடைக்குறதுலயும், பிரிதிநிதித்துவம் கிடைக்குறதுலயும் பின்னடைவு இருக்க சமூக காரணிகளோட, பொருளாதார காரணிகளும் சேர்ந்து எளியவர்களோட அரசியல் அதிகார உரிமையையும், கனவுகளையும் பறிச்சுக்குது.

பொருளாதாரத்துல வலுவா இருக்குறவங்களை முக்கால்வாசிக்கும் மேற்பட்டவங்க உயர்சாதியையும்/ஆதிக்க சாதியையும் சேர்ந்தவங்களா இருக்குறாங்க. அதுலையும் இது வெறும் 10-20% பேர்ட்ட தான் இருக்கு. இப்படி பொருளாதார ரீதியான நெருக்கடியை ஏற்படுத்துறது சமூக ரீதியான நெருக்கடியையும் சேர்த்தே உருவாக்குது. இதைதான் அந்த ஒரு சில கட்சிகளும் எதிர்பாக்குறாங்க.  

பல்வேறு மாநிலங்கள்ல இதுவரை ஆட்சியே அமைக்காத, அவ்வளவு ஏன் முழுசா 10 எம்எல்ஏக்களை கூட ஜெயிக்க வைக்க முடியாத தேசிய கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள், ஆட்சி அதிகாரத்துல இருக்கும், இருந்த கட்சிகளை மறைமுகமா தங்களுடைய நிலைபாட்டுக்கு மாத்துது. இது நேரிடையா பாசிச அரசாங்கத்தை உருவாக்காம, தேய்ந்த முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்தி அப்பறம் முழுசா பாசிசத்துக்கு மாத்துறதுக்கான தந்திர வே(வ)லை.


ஜனநாயகத்தை காப்பத்துறது மட்டும் இல்ல, அது மூலமா எளியவர்கள் அடைய போற அரசியல் அதிகாரத்தையும் இது மெல்ல மெல்ல தள்ளி போட்டு, அப்பறம் முழுசா தகர்த்துடும். 


தேர்தல் அரசியல்ல செலவு செய்ய வேண்டியது முக்கியமான ஒண்ணா மாறிட்டு. கொள்கையை மட்டும் கெட்டியா பிடிச்சிட்டு பொருளாதாரத்துல பின்தங்கி இருக்குற எளியவர்களை அரசியல் அதிகாரத்துல உட்கார வைக்க கட்சிகள் இப்போ பண்ணிட்டு இருக்க செலவோட கூடுதலா செலவு செய்யனும். தனிமனித பொருளாதாரத்தை உயர்த்திக்குறதுல கொள்கை பிடிப்பு கொண்டவங்க தீவிரமா இயங்கனும். கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கி எளியவர்களோட அரசியல் அதிகார உரிமையை அவங்களுக்கு கிடைக்க வைக்க வேண்டியது #அரசோட கடமை.  

ஜனநாயகத்தை காக்குறதுக்கு மட்டும் இல்ல நாம அரசியல் அதிகாரத்தை அடையவும் பொருளாதாரம் மிக முக்கிய கருவி.